கோம்பாக், ஆகஸ்ட் 29: நேபாளம்-திபெத் வெள்ளப் பெருக்குப் பேரிடரை, பொற்ப்பற்றத் தரப்பினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மலேசியர்கள் தொடர்பில் பொய்யான தகவலைப் பரப்பும் செயலை, மலேசியா சாலிடாரிட்டி: ஃபேமிலிஸ் இன் ஹோப் ( Malaysia Solidarity: Families in Hope :MASFIH) அமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள முகவர்கள் மூலம் தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்று ஊடகங்களுக்கு விற்கவும், குடும்பத்தினருக்குத் தவறான தகவல்களைப் பரப்பவும் சில தரப்பினர் முயன்று வருவதாக, பாதிக்கப்பட்ட மலேசியக் குடும்பங்களின் பிரதிநிதியான டி.எஸ் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உள்ளிட்ட வழிகளில் திருத்தி, அதன் மூலம்
போலிச் செய்திகளைப் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அவர்கள் தனிப்பட்ட விவரங்களைப் பெற்று ஊடகங்களுக்கு விற்க முயல்வதோடு, குடும்ப உறுப்பினர்களுக்குத் தவறான தகவல்களைப் பரப்பி அவர்களின் உணர்வுகளோடும் விளையாடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
எனவே பயணக் கடப்பிதழ்(Passport) அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மணிவண்ணன் எச்சரித்தார்.
ஏனெனில், தற்போதே பலரின் புகைப்படங்களும் பயணக் கடப்பிதழ்களின் எண்களும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன என்று அவர் இன்று நடைபெற்ற MASFIH செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
அவரால் கண்டறியப்பட்ட தவறான தகவல்களில், நேபாளத்தில் 19 மலேசியர்கள் இறந்து கிடந்ததாகக் கூறப்பட்ட வதந்தியும் ஒன்றாகும்.
இன்று காலையில் கூட 19 மலேசியர்கள் இறந்துவிட்டதாகப் போலிச் செய்தி பரவியது என்றும், நேபாளத்தில் உள்ள முகவர்கள் மூலம் சரிபார்த்ததில் அந்தச் செய்தி முற்றிலும் பொய் என்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பேரழிவு குறித்த நிலவரங்களின் உண்மைத்தன்மையை விரைவாகச் சரிபார்க்க, MASFIH அமைப்பு நேபாளத்தில் உள்ள 'பிரிஸ்டைன் இமாலயன் ட்ராக்கர்ஸ்' (Pristine Himalayan Trackers) அமைப்பின் உதவியைப் பெற்றுள்ளது.
இந்த அமைப்பு அங்குள்ள கட்டுப்பாட்டு மையம் மற்றும் இராணுவத்துடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், தகவல்களை மிக விரைவாகச் சரிபார்க்க முடிகிறது என்றும், ஏதேனும் செய்தி கிடைக்கும்போது உடனடியாக அவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்துவதாகவும் மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.






