கோம்பாக், ஆகஸ்ட் 29: "நாங்கள் சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. எங்களுக்குத் தேவை பதில்களும், ஒருங்கிணைப்பு முயற்சிகளும், நடவடிக்கையும் தான்.
புதிய தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்பதையும், எங்கள் அன்புக்குரியவர்கள் மறக்கப்படவில்லை என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறோம் என, நேபாள வெள்ளத்தில் சிக்கி இன்னும் கண்டறியப்படாமல் இருக்கும் மலேசியர்களின் குடும்பத்தினரின் கண்ணீர் கோரிக்கை அதுவாகும்.
அதையடுத்து, அந்த இயற்கை சீற்றத்தைத் தொடர்ந்து இன்னும் கண்டறியப்படாமல் இருக்கும் 49 மலேசியர்களின் நிலை குறித்து அவ்வப்போது புதுப்பிக்குமாறு விஸ்மா புத்ரா வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் குறித்த தகவல்கள் தொடர்சியாக வழங்க வேண்டுமென, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆதரவுக் குழுவான Malaysia "Solidarity: Families in Hope" (MASFIH) கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை நேரடியாகவும் துல்லியமாகவும் வழங்குவதற்கு ஒரு சிறப்புத் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் MASFIH குழுவின் பிரதிநிதி டி.எஸ் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கேட்டுக்கொண்டார்.
சிறப்புத் தொடர்பு அதிகாரியின் நியமனம் விஸ்மா புத்ரா, காத்மாண்டு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகங்கள் மற்றும் குடும்பப் பிரதிநிதிகளுக்கு இடையே ஒரே நேரடி தகவல் தொடர்பு வழியை உருவாக்க உதவும்.
இது வாரிசுகள் வெவ்வேறு அமைப்புகளைத் தனித்தனியாகத் தொடர்புகொண்டு தகவல் பெற வேண்டிய மன உளைச்சலையும் பரிதவிப்பையும் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில், காணாமல் போன மலேசியர்களின் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்தும் MASFIH சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு பயணக் குழுவைச் சேர்ந்த ஒன்பது நபர்களின் பெயர்கள் நேபாள சுற்றுலாத் துறையின் சில பதிவுகளில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, காணாமல் போனவர்களின் விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய, விஸ்மா புத்ரா, மலேசிய தூதரகம் மற்றும் நேபாள, சீன அதிகாரிகளுக்கு இடையே இந்தப் பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அக்குழு விரும்புகிறது.
"நாங்கள் பயணிகளின் பெயர்கள், கடப்பிதழ் (Passport) எண்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் கூடிய பட்டியலை அனுப்பியுள்ளோம். அதனால்தான், இந்தப்பட்டியலை உறுதிப்படுத்தி, காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் நேபாள தரப்புடன் ஒருங்கிணைக்க ஒரு தொடர்பு அதிகாரியைக் கோருகிறோம்," என்று அவர் கூறினார்.
தங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, தங்களது பட்டியலில் உள்ள 49 மலேசியர்களில் ஒருவர் கூட இன்னும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது மீட்கப்பட்டதாகவோ உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் MASFIH தெளிவுபடுத்தியது.
முன்னதாக 36 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியான செய்திகள், திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முக்கியப் பகுதியில் இல்லாத வேறு ஒரு குழுவினரைக் குறிப்பதாகும் என்று MASFIH விளக்கியுள்ளது.
நேபாளத்தின் ரசுவாவில் (Rasuwa) வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் மீட்கப்பட்ட 771 பேரில் மலேசியர்கள் யாரும் இல்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பாதிக்கப்பட்டவர்கள் கடைசியாக இருந்த இடங்களின் அடிப்படையில், நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை விரிவுபடுத்த, மலேசியா நேபாளம் மற்றும் சீனாவுடன் அனைத்துத் தூதரக வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் MASFIH வலியுறுத்தியுள்ளது.
சிலரின் கடைசித் தொடர்பு மற்றும் இருப்பிடம் குறித்த விவரங்கள் குடும்பத்தினரிடம் உள்ளன; இது மீட்புக் குழுவினர் தேடுதல் பகுதியை நோக்கி கவனம் செலுத்த உதவும் என மணிவண்ணன் கூறினார்.









