புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட் 29: ஆறாம் படிவ மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சருமான அன்வார், தற்போது ஆறாம் படிவ மாணவர்களில் ஒரு பகுதியினர் எந்தவிதமான உதவித்தொகையையும் பெறாத நிலையில் இருப்பதை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி ஐந்தாம் படிவம் வரையிலான மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல்வேறு வகையான கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், ஆறாம் படிவ மாணவர்களுக்கு இதுபோன்ற உதவி கிடைக்காத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், ஆறாம் படிவ மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகைக்கான ஒதுக்கப்படும் நிதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அன்வார் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலை மற்றும் நிதித் திறனைக் கருத்தில் கொண்டே அதற்கான தொகை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆறாம் படிவ மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் இந்த நடவடிக்கை, மாணவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







