கோம்பாக், ஆகஸ்ட் 28: சிலாங்கூர் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான கல்வி ஆதரவை மேலும் அதிகரிக்க மாநில அரசு முக்கியத்துவம் வழங்கும்.
இதனை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு உதவும் வகையில், கல்விக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்துவது இதில் அடங்கும் என அவர் கூறினார்.
அதேவேளை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய STEM துறைகளில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமிருடின் தெரிவித்தார்.

சிலாங்கூரில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அமிருடின், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியில் இந்த மாணவர்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி முறையை வலுப்படுத்த RM136.2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பல்கலைக்கழக மாணவர்களின் வளர்ச்சிக்காக RM2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி பல்கலைக்கழக மாநாடுகள், மாணவர் திட்டங்கள் மற்றும் ‘கித்தா சிலாங்கூர்’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், உயர்கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கும், ஸ்மார்ட் சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மற்றும் நிபுணத்துவ முன்முயற்சியான IKTISASS திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் ஆராய்ச்சி மானியங்கள், புத்தக வவுச்சர்கள் மற்றும் அடிப்படைப் பல்கலைக்கழகக் கட்டண உதவி, BAYU உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன.
அதேவேளை, சிலாங்கூரில் பிறந்த மாணவர்கள் சிலாங்கூர் பல்கலைக்கழகம், UNISEL மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகம், UIS ஆகியவற்றில் சேர்ந்து கல்வியைத் தொடரும்போது, அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.







