புத்ராஜெயா, அக் 17: கல்வி அமைச்சு 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளி பாடத்திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகளில் ஒன்றாக “நற்பண்பு உருவாக்கும் திட்டம்” (Program Pembentukan Karakter) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு கொண்ட மாணவர்களை உருவாக்குவதாகும்.
கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டம் தேசிய கல்வி அமைப்பில் ஒரு மூலதன மாற்றமாக இருந்து, மாணவர்களிடையே ஒழுக்கநெறி மற்றும் நற்பண்புகளின் வளர்ச்சியை விரிவாகவும் திட்டமிட்டும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
"பாலர் பள்ளியில், இந்த திட்டம் தினசரி கற்றல் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைந்த வகையில் நடைமுறைப்படுத்தப்படும்," என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வாரத்திற்கு 60 நிமிடங்கள் சிறப்பு நேரமாக ஒதுக்கப்பட்டு, மாணவர்களின் பண்புத் தத்துவ வளர்ப்பிற்கான செயல்பாடுகள் திட்டமிட்டு, குறிக்கோளுடன் முன்னெடுக்கப்படும்.
இந்த முயற்சி கல்வி, நற்பண்பு மற்றும் தனித்தன்மை ஆகிய அனைத்து துறைகளிலும் முழுமையான தலைமுறையை உருவாக்கும் தங்கள் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.