கோலாலம்பூர், ஜூலை 23 — 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) வரையும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும். அது அக்டோபர் மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியானது வலுவான பொருளாதாரக் குறியீடுகளால் மட்டுமே அளவிடப்படாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வருவதை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் அமையும் என்று நிதி அமைச்சருமான பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
அதிக எண்களை உருவாக்குவது அல்லது செல்வத்தைக் குவிப்பது மட்டும் அதன் நோக்கம் அல்ல, மாறாக மக்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் வாழச் செய்வதே அதன் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முடிவெடுக்கும் முன்பும், அந்த வளர்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறதா அல்லது சுருக்குகிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனிதர்களை வெறும் உற்பத்திச் சாதனங்களாகப் பார்க்காமல், நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுபவர்களாக நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதாரக் கொள்கைகள், குறைக்கடத்தி (semiconductor), எரிசக்தி மாற்றம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவை நிர்வாகத்தின் தார்மீக நோக்கத்தைப் புறக்கணிக்க முடியாது என்று பிரதமர் கூறினார்.
நாட்டின் செழிப்பு என்பது சிறந்த ஊதியம், அர்த்தமுள்ள வேலைவாய்ப்பு, மலிவு விலை வீடுகள், தரமான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் வெளிப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.







