ஷா ஆலாம், ஆகஸ்ட் 28: இன்று காலை சிலாங்கூரில் மூன்று பகுதிகளில் காற்று மாசு குறியீடு, API ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தற்போது 20 பகுதிகளில் API அளவு ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி நிலவரத்தில் சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா பகுதியில் அதிகபட்சமாக 153 என்ற API அளவு பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஷா ஆலாமில் 152 ஆகவும், பெட்டாலிங் ஜெயாவில் 126 ஆகவும் API பதிவாகியுள்ளது.
இதனிடையே, கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் API 91 ஆகவும், பந்திங்கில் 83 ஆகவும் உள்ளது.
சிலாங்கூரில் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், புகைமூட்ட நடவடிக்கைத் திட்டத்தை மாநில அரசாங்கம் கடந்த புதன்கிழமை செயல்படுத்தியது.
API அளவு 200ஐ எட்டினால், பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மூடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பாக சுவாசக் கோளாறுகள் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டவர்கள், வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.







