ஜகார்த்தா, ஆகஸ்ட் 24: எல்லை கடந்த புகைமூட்ட அபாயம் குறித்து இந்தோனேசியா, தனது அண்டை நாடுகளை அழைத்து தகவல் தெரிவித்துள்ளது.
தனது நாட்டில் காடு மற்றும் நிலப்பரப்புகள் தீப் பற்றி எறிவதை அடுத்து , எல்லை கடந்து ஏற்படும் காற்று மாசு குறித்து இந்தோனேசியா அண்டை நாடுகளுக்கு தகவல் அளித்திருக்கின்றது.
அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்ற வழியாகவும் அந்த தகவலை வெளியுறவு அமைச்சர் சுகியோனோ கொண்டு சேர்த்திருப்பதாக அந்நாட்டு செயலக அமைச்சர் பிரசெட்டியோ ஹாதி தெரிவித்தார்.
"காடு மற்றும் நிலப்பரப்புத் தீயை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கட்டுப்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம்" என்று ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டு ஊடகமான அந்தாரா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கு கலிமந்தான் பகுதியில் தொடர்ந்து பரவலான தீப்புள்ளிகள் (hotspots) பதிவாகி வருவதாக சனிக்கிழமை பிரசெட்டியோ கூறினார்.
அதிகாரிகள் நடுத்தர அளவிலான நம்பகத்தன்மையுடன் 3,100 தீப்புள்ளிகளையும், குறைந்த அளவிலான நம்பகத்தன்மையுடன் 406 தீப்புள்ளிகளையும் கண்டறிந்துள்ளனர்.
இவை பெரும்பாலும் அந்த மாகாணத்தின் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் குவிந்துள்ளன.
மேலும், காடு மற்றும் நிலப்பரப்புத் தீயுடன் தொடர்புடைய விதிமீறல் சந்தேகங்களின் பேரில் மேற்கு கலிமந்தானில் உள்ள நான்கு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்துகளின் அபாயம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் உத்தரவின் பேரில், மேற்கு கலிமந்தானில் தீயணைப்புப் பணிகளை வலுப்படுத்துவதற்காக , இந்தோனேசியா சனிக்கிழமையன்று கூடுதலாக சுமார் 1,500 ராணுவ வீரர்களையும், வான்வழியாகத் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் (water-bombing) ஆறு பெரிய ஹெலிகாப்டர்களையும் அங்கு அனுப்பியுள்ளதாக அறிவித்தது.







