ஷா ஆலம், ஆகஸ்ட் 28: நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
அதனால், புகைமூட்டம் தொடர்ந்து நீடித்தால், அத்தியாவசியமற்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை முதலாளிகள் பரிசீலிக்கலாம் என மலேசிய முதலாளிமார் சங்கம், MEF தெரிவித்துள்ளது.
எனினும், நாடு முழுவதும் கட்டாயமாக WFH நடைமுறையை அமல்படுத்துவது அவசியமில்லை. உண்மையான நிலவரம் மற்றும் பணிசார் செயல்பாட்டு அபாயங்களை அடிப்படையாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என MEF தலைவர் டத்தோ சையட் ஹுசைன் சையட் ஹுஸ்மான் கூறியுள்ளார்.

புகைமூட்டத்தின் தீவிரம் மற்றும் அது நீடிக்கும் காலம், API அளவுகள், அத்துடன் சம்பந்தப்பட்ட பணியின் தன்மை ஆகியவற்றை முதலாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம், தளவாடம், சில்லறை விற்பனை உள்ளிட்ட பல துறைகளில் பணிகளை இணையம் வாயிலாக மேற்கொள்ள முடியாது என்பதால், நாடு முழுவதும் பொதுவான WFH உத்தரவைப் பிறப்பிப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என MEF சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, முதலாளிகள் பணியிடங்களில் அபாய மதிப்பீடுகளை மேற்கொண்டு, தேவைக்கேற்ப பணிநேர அட்டவணைகளை மாற்றியமைக்க வேண்டும். பணியிடத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஊழியர்களுக்கு, குறிப்பாக வெளிப்புறங்களில் பணிபுரிபவர்களுக்கு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சையட் ஹுசைன் அறிவுறுத்தினார்.
ஊழியர்களுக்கான சுவாசப் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாகத் தேர்வு செய்யப்பட்டு, சரியான முறையில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
தொழில் நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்வதுடன், ஊழியர்களின் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்துவது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.







