கோலாலம்பூர், ஆகஸ்ட் 5— சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்வதற்காக சுமார் 3,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை துறை அதிகாரியை ஆறு நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலாக்கா MACC கோரிக்கையை ஏற்று மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி சந்தேக நபரை ஆகஸ்ட் 10 வரை தடுப்பு காவலில் வைக்க அனுமதி வழங்கினார்.
சுமார் 20 வயதுடைய சந்தேக நபர், நேற்று முன்தினம் காலை 11.50 மணியளவில் கெடா, சுங்கை பெட்டாணியில் உள்ள அவரது இல்லத்தில் MACC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் கடந்த மார்ச் மாதம் சிறை ஒன்றில் பணியில் இருந்தபோது இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது.
"தனது e-wallet கணக்கிற்குப் பணப் பரிமாற்றம் மூலம் சந்தேக நபர் இந்த லஞ்சப் பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளார். தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சிறைக்குள் கொண்டு செல்வதற்கு உதவியாக இந்தத் தொகை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் MACC சட்டம் 2009 பிரிவு 17(a)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.







