நேபாள வெள்ளத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களில் 17 பேர் மலேசியர்கள்

26 ஆகஸ்ட் 2026, 4:37 PM
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களில் 17 பேர் மலேசியர்கள்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 27 - நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளில் 17 மலேசியர்களும் அடங்குவர்.

நேபாளத்தில் நேற்று வெள்ளம் பாதித்ததைத் தொடர்ந்து 291 வெளிநாட்டினர் உட்பட 380-க்கும் மேற்பட்ட சுற்றுப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

17 மலேசியர்களுடன் , 100-க்கும் மேற்பட்ட இந்திய நாட்டவர்கள், 12 பிரிட்டன் மக்கள், நான்கு தென்னாப்பிரிக்கர்கள், மூன்று அமெரிக்கர்கள், ஓர் ஆஸ்திரேலியர் மற்றும் ஒரு டச்சுக்காரர் ஆகியோரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவ்வாரியம் கூறியுள்ளது.

மேலும் 111 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை .

வடக்கு ரசுவாவில் உள்ள போதே கோஷி ஆற்றுப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மாபெரும் திடீர் வெள்ளப்பெருக்கினால், சந்தைகள், குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை, ரசுவா மாவட்டத்தில் இருப்பதாக நம்பப்படும் 11 மலேசியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகப் பயண முகவர்களிடமிருந்து காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் தகவல் பெற்றுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.

தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் காரணமாகவே இந்தத் தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வெளியுறவு அமைச்சு நம்புகிறது.

மலேசியர்களின் இருப்பிடத்தைக் கண்டறியவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நேபாள அரசால் நிறுத்தப்பட்டுள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினருடன் தூதரகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகத் தூதரகம் தெரிவித்தது.

நேபாளத்தில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள், விழிப்புடன் இருக்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அனைத்துப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மலேசியர்கள் தங்களின் தொடர்பு விபரங்களை இ-கான்சுலர் (e-Konsular) அகப்பக்கம் மூலம் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

உடனடி தூதரக உதவி அல்லது அவசரச் சூழல்களுக்கு, மலேசியர்கள் காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தை +977 1544 5680 அல்லது +977 1544 5681 (பொது), +977 1544 5689 (தூதரகம்), அல்லது +977 980 100 8000 (அவசரகால உதவி எண்) ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் அல்லது mwkathmandu@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.