காத்மாண்டு, ஆகஸ்ட் 24 - புதன்கிழமையன்று ( 26 ஆகஸ்ட்)நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பேரளவிலான அழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த பேரிடரில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் காணாமல் போயிருப்பதாக அஞ்சப்படுகிறது.
இன்னும் நீடிக்கும் இந்த இயற்கை சீற்றம் தொடர்பில் , வெளியாகியிருக்கும் காணொளிகள், திடீரென பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதைக் காண முடிந்தது.
அதையடுத்து உயிரிழப்பு கணிசமாக உயரலாமெனவும், பேரளவிலான சேதங்களை அது கொண்டு வருமெனவும் அதிகாரத்துவ தரப்பினர் ஐயம் தெரிவித்தனர்.

ஆரம்ப தகவல்கள், அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் உடைந்து பெரும் வெள்ளம் ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாமென நம்பப்படுவதாக , நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானால் தெரிவித்தார்.
341 வெளிநாட்டவர்கள் உட்பட 403 சுற்றுப்பயணிகள், பேரிடர் நிகழ்ந்து சில மணி நேரங்கள் ஆகியும் இதுவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக, நேபாள கலாச்சார , சுற்றுலாம் பொது வான் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
காணாமல் போயிருக்கும் பெரும்பாலோர் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனிடையே , தொடக்க புள்ளிவிபர அடிப்படையில், தனது எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திபெத் வெள்ளத்தில் மூவர் உயிரிழந்திருப்பதாகவும், 265 பேரைக் காணவில்லை என்றும் சீனாவின் சிசிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வேளையில், நேபாள அரசாங்கம் உடனடி மீட்பு பணிகளுக்காக இந்தியா , சீனா இரு நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.
அதையடுத்து அனைத்துவிதமான மனிதநேய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக இந்தியா கூறியுள்ளது. தேடி மீட்கும் பணிகளில் தங்களது குழுவினர் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வெள்ளப் பெருக்கில் காணாமல் போயிருக்கும் வெளிநாட்டவர்களில் நூற்றுக்கும் அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சீனா, அதன் 574 மீட்பு பணியாளர்களைத் திபெத்தின் கியிரோங் பகுதிக்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.
பாதைகளில் சகதிகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு படிந்திருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய குறைந்தது 4 மணி நேரமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் ஆன்மீகப் பயணத்திற்கும் மலையேறும் நடவடிக்கைகளுக்கும் பிரபலமானவை ஆகும்.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக, உலகின் பிற பகுதிகளை விட இமயமலைப் பகுதி மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது.
இதனால், இந்தியா உட்பட பல நாடுகளை உள்ளடக்கிய இந்த இமயமலைப் பகுதி, கடுமையான கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய அபாயகரமான சூழலில் உள்ளது.








