காட்மாண்டு, செப் 18 - நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதன் உச்சத்தை எட்டும் தருணத்தில் அந்நாட்டில் வெடித்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான போராட்டங்கள் அங்குள்ள வணிகர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்மாண்டுவின் மிகவும் பிரபலமான சுற்றுலா மையமான Thamel போன்ற இடங்களில் இருக்கும் கடைகளும் உணவகங்களும் பெரும்பாலும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
72 பேர் கொல்லப்பட்டதோடு, 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது மட்டுமின்றி நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒளி பதவி விலகக் கட்டாயப்படுத்திய இந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு, வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் அவை பாதிப்பையே எதிர்நோக்கி வருகின்றன.
சுற்றுப்பயணிகளின் வருகை 30 விழுக்காடு குறைந்துள்ளது. பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக நேபாள சுற்றுலா ஆணையம், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் மலையேறும் நடவடிக்கையின் ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாடிக்கையாளர்களில் 35 விழுக்காட்டினர் தங்களின் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை பரவிய நாடாளுமன்றம் மற்றும் ஹில்டன் தங்கும் விடுதி உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் எரியும் புகைப்படங்கள், நேபாளத்திற்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்க தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க பல நாடுகளுக்கு வழிவகுத்தன.
எனினும், நேபாளத்தில் தொடர்ந்து தங்கி வரும் சுற்றுப்பயணிகள் பலர் தாங்கள் அந்நாட்டில் பாதுக்காப்பாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பெர்னாமா