காத்மாண்டு, செப் 15 - நேபாளத்தின் புதிய இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் சுஷிலா கார்கி தாமும் தமது குழுவினரும் அதிகாரத்தில் ஆர்வமோ அல்லது விருப்பமோ கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார், மாறாக நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
"நாங்கள் இணைந்து பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். நாட்டிற்கு சேவை செய்யவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஆறு மாதங்களுக்கு மட்டுமே, அதற்கு மேல் இல்லை. அனைத்து பணிகளையும் பொறுப்புகளையும் முடித்த பிறகு நாங்கள் சுதந்திரமாக இருப்போம், புதிய அமைச்சர்களிடமும் நாடாளுமன்றத்திடமும் அதை ஒப்படைப்போம். நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்துள்ளோம்," என்றார் அவர்.
இடைக்காலப் பிரதமராக பொருப்பேற்றிருக்கும் 73 வயதான கார்கி நேற்று அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார்.
செப்டம்பர் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அண்மையில் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாக முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அதனை தொடர்ந்து சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.
--பெர்னாமா