காட்மாண்டு, செப். 15 - இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்துவதற்கு நியமனம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சுசிலா கார்க்கி நேற்று நேபாளப் பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் கட்கா பிரசாத் சர்மா ஒலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிய பின்னர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக முன்னாள் தலைமை நீதிபதியான பெண் கார்க்கி வெள்ளிக்கிழமை நாட்டின் முதல் பெண் பிரதமராக அதிபர் ராம்சந்திர பவுடலால் முன்னிலையில் பதவி ஏற்றார்.
போராட்டங்களின் போது பிரதமர் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிங்கா தர்பாரில் உள்ள உள்துறை அமைச்சின் கட்டிடத்திலிருந்து தனது அதிகாரப்பூர்வ பணிகளைத் தொடங்கினார்.
அண்மைய வாரப் போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது அவரது தொடக்கப் பணிகளில் ஒன்றாகும். "ஜென் இசட்" எனும் இளையோர் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை தியாகிகளாக அரசாங்கம் அங்கீகரித்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டதாக தலைமைச் செயலாளர் ஏக்நாராயண் ஆர்யல் கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடக தளங்கள் மீதான தடையால் தூண்டப்பட்ட இந்த மக்கள் போராட்டங்களில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.