செப்பாங், ஆகஸ்ட் 26 - சிலாங்கூரின் அண்மைய புகை மூட்ட நிலவரம் தொடர்பில், பேரிடர் நிர்வகிப்புக்கான சிறப்பு செயற்குழு நாளை கூட்டம் நடத்தவுள்ளது.
மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மாட் ஃபாட்சில் அஹ்மாட் தாஜூடின் தலைமையேற்கும் அந்த கூட்டத்தில், புகை மூட்டத்தின் தாக்கம் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும்.
பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்படும் முடிவு மக்களுக்கு அறிவிக்கப்படுமென, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
இதனிடையே , சிலாங்கூரின் புகை மூட்டம் இன்னும் ஆபத்தான ஒரு நிலையை எட்டவில்லை என அவர் கூறினார். எனினும் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற குறியீட்டினைக் காட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
" எனவே, தற்போதைக்கு முடிந்தால் மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்துகிறேன்" என அமிரூடின் ஷாரி கூறினார் .
டெங்கில் சட்டமன்றத் தொகுதியில் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இன்று காலை, சிலாங்கூரின் 5 இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்தது.
ஜோஹன் செத்தியாவில் மிக உயர்வாக 161-ஆகவும், ஷா ஆலாமில் 158-ஆகவும், பந்திங்கில் 151-ஆகவும், கிள்ளானில் 135 -ஆகவும் , பெட்டாலிங் ஜெயாவில் 112-ஆகவும் பதிவு செய்யப்பட்டது.







