குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட் 23 - நாட்டில் காற்று மாசு தொடர்பிலான சுகாதாரப் பிரச்சனை குறித்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நாட்டின் சில பகுதிகளைப் பாதித்திருக்கும் புகை மூட்டப் பிரச்சனையை அடுத்து அந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
32-தொற்றுநோயியல் வாரத்திற்கும் 33-வது வாரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.
ஆஸ்துமா சுவாசப் பிரச்சனைக்கான சம்பவங்கள் 259 விழுக்காடு அதிகரித்துள்ளது. URTI எனப்படும் மேல் சுவாசப் பாதை தொடர்பான தொற்றுகள் 124 விழுக்காடு உயர்ந்தன. இதனிடையே விழிவெண்படல அழற்சி 7 விழுக்காடு குறைந்தது.
இவ்வேளையில், வெயில் தொடர்பான உடல் நலப் பாதிப்புகள் குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட், மொத்தம் 90 சம்பவங்கள் பதிவாகியதாகக் கூறினார்.
அதில் 71 சம்பவங்கள் வெப்பச் சோர்வு, 14 சம்பவங்கள் வெப்ப வாதம், ஐந்து சம்பவங்கள் வெப்பத் தசைப் பிடிப்பு ஆகியவை ஆகும்.
வெப்ப வாதம் தொடர்பான சம்பவங்களில் 8 சிலாங்கூர் சுக்மா போட்டியுடன் தொடர்புடையதாகும். அதில் ஒருவர் மட்டுமே வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என அமைச்சர் கூறினார்.
பொது மக்கள் தற்போதைய வானிலை குறித்து விழிப்புணர்வோடு இருப்பதுடன், வெயிலில் இருந்து பாதுகாப்பு பெறுமாறும் அவர் அறிவுறுத்தினார்.







