எல்ஆர்டி 3-இன் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார் சிலாங்கூர் சுல்தான்

13 ஜூலை 2026, 9:17 AM
எல்ஆர்டி 3-இன் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார் சிலாங்கூர் சுல்தான்

ஷா ஆலாம், ஜூலை 13 – கடந்த ஜூன் 29 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள ஷா ஆலாம் வழித்தட இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) சேவையைப் பார்வையிட இன்று அதில் சிலாங்கூர் சுல்தான் அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொண்டார்.

இந்த அரசப் பயணத்தில் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி, ஹாஜா நோர்ஹாஷிகின் மற்றும் சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா ஆகியோரும் சுல்தானுடன் உடன் இருந்தனர்.

ரயிலின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்த சுல்தான், பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹான் செத்தியா நிலையம் வரையிலான 37.8 கிலோமீட்டர் தூர வழித்தடத்தை பார்வையிட்டார். இந்த வழித்தடத்தில் 2.5 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை உட்பட மொத்தம் 20 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

முன்னதாக, இந்த எல்ஆர்டி 3 சேவை சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்க உதவும் என்று சுல்தான் ஷாராபுடின் நம்பிக்கை தெரிவித்தார். அதோடு, கோலாலம்பூரில் பணிபுரியும் கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் மக்களுக்கு இது வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத் தேர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இச்சேவை சீராகவும் சிறப்பாகவும் இயங்குவதை உறுதி செய்ய, எல்ஆர்டி 3 இன் அனைத்து வழித்தடங்களையும் பிரசரானா நிறுவனம் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.

இந்த உள்கட்டமைப்பு வசதியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். மேலும், கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் ஆகிய நகரங்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தி நாட்டின் முதன்மை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் சுல்தான் விவரித்தார்.

மொத்தம் 16.63 பில்லியன் ரிங்கிட் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஷா ஆலாம் வழித்தட எல்ஆர்டி 3 திட்டம், நாட்டின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளில் ஒன்றாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.