ஈப்போ, ஜூலை 19: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேசியக் கொடி தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்கும் போது, அசல் வடிவமைப்பு மற்றும் கூறுகள் துல்லியமாகக் காட்டப்படுவதை உறுதி செய்யப் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் நினைவூட்டியுள்ளார்.
குறிப்பாக, தேசியக் கொடியின் முக்கிய அம்சமாக விளங்கும் 14 கோடுகளில் எந்தவொரு தவறும் அல்லது குறைபாடும் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படாமல் இருப்பதை உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators) உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசியக் கொடியை முறையாகப் பறக்கவிடுவதற்கான சரியான நெறிமுறைகளைக் கற்றுக்கொள்வதோடு, ஏஐ வழி கொடியை உருவாக்கும் போது அதன் 14 கோடுகளும் விடுபடாமல் இருப்பதைச் சரிபார்ப்பது மிக முக்கியம் என்று அவர் கூறினார்.
மேலும், தேசிய மாதக் கொண்டாட்டங்களின் போது ஊடக நிறுவனங்கள் வெளியிடும் ஏஐ வழி வடிவமைக்கப்பட்ட தேசியக் கொடிகள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய, மலேசியப் பத்திரிகை நிறுவனம் (MPI) மற்றும் மலேசிய ஊடகக் கவுன்சில் ஆகியவற்றுடன் தங்களது அமைச்சகம் இணைந்து செயல்படும் என்றும் அவர் விவரித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் அல்லது நேரடியாகத் தேசியக் கொடியைக் காட்சிப்படுத்துவதில் தவறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, அமைச்சகம் முதலில் தவற்றினைத் திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கும் அணுகுமுறையையே கையாளும் என்று ஃபஹ்மி தெளிவுபடுத்தினார்.
இதற்கெனச் சட்டங்கள் இருந்தாலும், தவறு செய்தவர்களைத் தொடர்பு கொண்டு முதலில் அறிவுரை கூறுவோம் என்றும், ஒருவேளை அவர்கள் அதனைத் திருத்த மறுத்தால் மட்டுமே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்படும்.
இன்று தொடங்கி எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை குடியிருப்புப் பகுதிகள், கிராமங்கள் மற்றும் அரசு வளாகங்களில் ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு தேசப்பற்றை வெளிப்படுத்துமாறு அவர் மலேசியர்களை ஊக்குவித்தார்.
இந்த ஆண்டின் தேசிய தினக் கொண்டாட்டம் புத்ராஜெயாவிலும், மலேசியத் தினக் கொண்டாட்டம் சரவாக்கிலும் நடைபெறவுள்ள வேளையில், இதற்கான அதிகாரப்பூர்வ இலச்சினை, தேசப்பற்றுப் பாடல்கள் மற்றும் விளம்பரப் பொருட்களைப் பொதுமக்கள் merdeka360 இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.







