தொலைபேசி மோசடியால் வியாபாரி ஒருவர் 8.8 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்

7 மே 2026, 1:32 AM
தொலைபேசி மோசடியால் வியாபாரி ஒருவர் 8.8 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்

கோலா திரங்கானு, மே 7: கோலா திரங்கானுவில் மார்ச் மாதம் அரங்கேறிய ஒரு மோசமான 'போன் ஸ்கேம்' (Phone Scam) எனப்படும் தொலைபேசி மோசடியில் சிக்கிய 50 வயது மதிக்கத்தக்க வியாபாரி ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பான 882,920 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான தகவல்களை வெளியிட்ட கோலா திரங்கானு மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி அஸ்லி முகமட் நூர், கடந்த மார்ச் 23-ஆம் தேதி பாதிக்கப்பட்ட அந்த வியாபாரிக்கு அடையாளம் தெரியாத ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

அந்த நபர் தன்னை 'எத்திகா தக்காஃபுல்' (Etika Takaful) காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் பெயரில் மருத்துவமனையில் போலி காப்பீட்டு கோரிக்கை (Insurance Claim) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்த நபர் பயமுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அதனை மறுத்தபோது, அந்த அழைப்பு காவல்துறை அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. அந்த நபர் இணையம் வாயிலாகப் புகார் அளிக்க உதவுவதாகக் கூறி நம்பவைத்துள்ளார்.

மேலும், அந்த வியாபாரி பணமோசடி மற்றும் ஊழல் புகார்களிலும் சிக்கியிருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர். இந்த வழக்குகளில் இருந்து விடுபட வேண்டுமானால், உடனே இரண்டு புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அவரிடம் உள்ள அனைத்துச் சேமிப்புப் பணத்தையும் விசாரணைக்காக அந்தப் புதிய கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர்.

காவல்துறை நடவடிக்கைக்குப் பயந்த அந்த வியாபாரி, தனது தாபுங் ஹாஜி (Tabung Haji), அமானா சாம் பூமிபுத்ரா (ASB) மற்றும் அமானா சாம் வாவாசான் (ASW) ஆகிய கணக்குகளில் இருந்த அனைத்துப் பணத்தையும் புதிய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, விசாரணை முடியும் வரை அந்த வங்கிக் கணக்குகளிலிருந்து எந்தப் பணப் பரிவர்த்தனையையும் செய்யக்கூடாது என்றும் மோசடி கும்பல் அவரை எச்சரித்துள்ளது.

இருப்பினும், அனைத்துப் பணத்தையும் மாற்றிய பிறகும் அந்த கும்பல் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு வற்புறுத்தியதால் சந்தேகமடைந்த வியாபாரி, தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்துள்ளார்.

அப்போது மார்ச் 29 முதல் மே 4-ஆம் தேதி வரை, பல தவணைகளாகத் தனது கணக்கிலிருந்து அறிமுகமில்லாத பிற கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வியாபாரி நேற்று மதியம் 12.36 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு இதுபோன்ற சந்தேகத்திற்குரிய அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.