கோலா திராங்கனு, ஆகஸ்ட் 2: கோலா திரங்கானுவில் பெண்கள் ஆடை விற்பனையாளர் ஒருவர் போலியான இணைய முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்டு சுமார் RM290,910 இழந்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றைக் பார்த்து 61 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்மணி ஈர்க்கப்பட்டதாகக் கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.
குறைந்த முதலீட்டில் மூன்று மணி நேரத்திற்குள் பெரும் அளவில் இலாபம் ஈட்டலாம் என்று ஆசை காட்டிய அந்த மோசடி நபர்களை நம்பி அந்த பெண்மணி முதலீடு செய்துள்ளார்.
"அவர் ஆரம்பத்தில் சில தொகையை மூலதனமாகச் செலுத்தியுள்ளார். பின்னர், அவருடைய முதலீடு லாபத்தை ஈட்டியுள்ளதாக மோசடி நபர்கள் போலித் தகவல் அளித்துள்ளனர். எனினும், அந்த இலாபத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில், கட்டணமாக கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்தக் கட்டணத்தைச் செலுத்திய பிறகும், வாக்குளிக்கப்பட்ட இலாபத் தொகை கிடைக்காததால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி காவல்துறை அதிகாரி போல் நடித்து மற்றொரு சந்தேக நபர் அவரை ஏமாற்றியுள்ளார்," என்று அஸ்லி விவரித்தார்.
பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற விரக்தியிலும் பதற்றத்திலும் இருந்த அந்தப் பெண்மணி, இணைய மோசடி வழக்குகளைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் என்று பொய் கூறிய சந்தேக நபர்களின் பேச்சை நம்பி மீண்டும் மீண்டும் பணத்தை வாரி வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 14 முதல் ஜூலை 31 வரை பல்வேறு கட்டங்களாக, தனது சொந்த சேமிப்புப் பணம் மற்றும் தங்க நகைகளை அடகு வைத்து கிடைத்த தொகையிலிருந்து மொத்தம் 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 16 முறை பணத்தை அவர் கைமாற்றியுள்ளார்.
இறுதியில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டப் பிரிவு 420-இன் கீழ் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக உதவி ஆணையர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.







