கோலாலம்பூர், டிச 8 — இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை நாட்டில் மொத்தம் 67,735 இணைய குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் RM2.7 பில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு தொடர்பான மோசடிகள் 28,698 வழக்குகளுடன் அதிகபட்சமாகப் பதிவானதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மின்வணிக மோசடிகள் 14,881 வழக்குகளாகப் பதிவாகியுள்ளன என புக்கிட் அமான் வணிகக் குற்ற விசாரணைத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்தது.
அதே அறிக்கையில், முதலீட்டு மோசடிகள் 9,296 வழக்குகளுடன் முக்கிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் கடன் வழங்கும் மோசடிகள் 8,029 வழக்குகள், மின்நிதி குற்றங்கள் 5,853 வழக்குகள் மற்றும் காதல் மோசடி (Love Scam) 978 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நிதி இழப்பைக் கணக்கிடுகையில், முதலீட்டு மோசடிகள் RM1.37 பில்லியனைத் தாண்டிய மிக உயர்ந்த இழப்பை ஏற்படுத்தியுள்ளன. அடுத்து தொலைத்தொடர்பு மோசடிகள் RM715.7 மில்லியன், மின்நிதி குற்றங்கள் RM458.1 மில்லியன், மின்வணிக குற்றங்கள் RM123.7 மில்லியன், போலி கடன் வழங்கும் மோசடிகள் RM59.1 மில்லியன் மற்றும் காதல் மோசடிகள் RM43.7 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டில் இணைய மற்றும் மின்னணு குற்றங்களின் அதிகரிப்பு கவலைக்கிடமாக இருப்பதைக் காட்டுகிறது. மோசடிக்கு பலியாகும் பொதுமக்கள், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை உடனடியாகத் தடுக்க தங்கள் வங்கியைத் தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவர்கள் தேசிய மோசடி மையத்தை 997 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, காவல்துறையில் புகார் அளிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.


