சுபாங், ஆகஸ்ட் 15 — சுபாங் விமான நிலையத்தில் இயந்திரச் சோதனைக்காகப் புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இந்தச் சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேர் நல்வினைப் பயனாக உயிர் தப்பினர்.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது தொடர்பான அவசர அழைப்பு தங்களுக்கு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் செயல்பாட்டு இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.
தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்தபோது, ஹெலிகாப்டர் முழுமையாக தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
தீ மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், விமான நிலைய தீயணைப்பு - மீட்புச் சேவைக் குழுவினரும் இணைந்து, அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீயை அணைக்கும் பணியில் உதவியாக செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் தீப்பிடித்ததற்கான காரணம் மற்றும் சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, சுபாங்கில் உள்ள அந்த சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் , அனைத்து விமானச் சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மலேசிய பொது விமானப் போக்குவரத்து வாரியம் (CAAM) தெரிவித்தது.
"தற்போது ஓடுதளம் மூடப்பட்டுள்ளது. ஆகவே, பயணிகள் தங்களின் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அவ்வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.







