
ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 - பஹாங் மாநிலத்தின் குறிசுடும் வீரர் ஜியா சென் ஹொங் ( Cheah Zen Hong ) 2026 சுக்மா போட்டியின் சிறந்த வீரராகவும், சிலாங்கூரின் நீச்சல் வீராங்கனை எலிசா தன் ஆய் ஷென் (Eliza Tan Ai Shen ) சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
சுக்மா போட்டியில் 20 வயது சென் ஹொங் 9 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு, இரு சுக்மா சாதனைகளையும் பதிவுச் செய்தார்.

சிறந்த வீரருக்கான விருதினை சிலாங்கூர் மாநில விளையாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹ்ட் நஜ்வான் ஹலிமி வழங்கினார்.
சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமிர் ஷா, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி ஆகியோர் உடனிருக்க அந்த விருதினை சென் ஹொங் பெற்றுக் கொண்டார்.
சென் ஹொங், 2024 சரவாக் சுக்மாவில் வென்ற 7 தங்கப் பதக்க எண்ணிக்கையைக் காட்டிலும், இம்முறை சுக்மாவில் 9 தங்கப் பதக்கங்களை வென்று தனது தனிப்பட்ட சாதனையையும் மேம்படுத்திக் கொண்டார்.

இவ்வேளையில், நீச்சல் குளத்தில் ஈட்டிய 7 தங்கப் பதக்கம், எலிசா சிறந்த வீராங்கனையாக உருவெடுக்க வைத்தது.
19 வயதான எலிசா உயர்கல்வியைத் தொடர வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதால், இன்றிரவு விருதினைப் பெற வரவில்லை.

அவருக்குப் பதிலாக, சிலாங்கூர் அணியின் தலைவர் அப்பாஸ் சலிமி ச்செ அட்ஸ்மி விருதினைப் பெற்றுக் கொண்டார்.
நீச்சல் குளத்தில் 50 மீட்டர் ஃபிரிஸ்டல் பிரிவில் பதிவுச் செய்த 26.44 வினாடிகள் , எலிசாவின் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.
அப்பிரிவில் 2008 -ஆம் ஆண்டு முதல் 26.50 வினாடிகளாக இருந்த சபாவின் லியுங் ஜி லினின் சுக்மா சாதனை நேரத்தை எலிசா முறியடித்தார்.







