
ஷா ஆலாம், ஆகஸ்ட் 23 - சிலாங்கூர் அணி 2026 சுக்மா போட்டிக்கான அதன் தங்கப் பதக்க இலக்கை எட்டியது.
இன்று மதியம் மணி 1.20-க்கு , மின்னியல் விளையாட்டின் வாயிலாக சிலாங்கூர் அதன் 80-வது தங்கப் பதக்கத்தை வாகை சூடியது.
"இன்று மதியம் மணி 2 வாக்கில் மட்டும் இன்றைய நாளுக்கான 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. இன்னும் போட்டிகள் நடைபெறுவதால், சிலாங்கூர் அணியின் தங்கப் பதக்க எண்ணிக்கை அதிகரிக்குமென நம்புகிறேன் " என விளையாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
சுக்மாவில் சிலாங்கூருக்கு அதிகம் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த விளையாட்டாக நீச்சல் பிரிவு திகழ்கிறது. இன்று பிற்பகல் வரை மட்டும் அப்பிரிவு 17 தங்கப் பதக்கங்களை அள்ளித் தந்தது.
" பதக்க இலக்கை எட்டிவிட்டோம். அடுத்து ஒட்டுமொத்த வெற்றியாளராகுவதற்கான சரியான தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாளை வரை இன்னும் 90 பிரிவுகளுக்கான விளையாட்டுகள் உள்ளன." என மொஹமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இதனிடையே, இப்போட்டியில் அபார ஆற்றலை வெளிப்படுத்திய நீச்சல் வீராங்கனை ஷன்னோன் தன் யங் கிங் சிறந்த வீராங்கனையாக மகுடம் சூடும் வாய்ப்பு இருப்பதாக நஜ்வான் குறிப்பிட்டார்.
இன்று மதியம் வரை, 16 வயதுடைய ஷன்னோன் 7 தங்கப் பதக்கங்களை வென்றதோடு, மூன்று சுக்மா சாதனை நேரத்தையும் பதிவுச் செய்தார். அவர் தற்போது தனது எட்டாவது சுக்மா தங்கப் பதக்கத்திற்கு இலக்கு வைத்துள்ளார்.







