
ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 - கிள்ளான் பாயு ஏமாஸ் கிரிக்கெட் வளாகத்தில் நடைபெற்ற சுக்மா ஆடவருக்கான டி20 இறுதிப் போட்டியில் சிலாங்கூர் அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
முதல் சுற்றில் கூட்டரசு பிரதேசம் எடுத்த 76 ஓட்டங்களைக் காட்டிலும், சிலாங்கூர் அணி 16-வது ஓவரில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 78 ஓட்டங்களைப் பதிவுச் செய்து வெற்றியை உறுதிச் செய்தது.
தொடக்கத்திலிருந்தே தனது ஆட்டக்காரர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம் குறித்து தாம் மிகுந்த திருப்தி கொள்வதாக சிலாங்கூர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரோஷன் சென்னா சிங் தெரிவித்தார்.
"நாங்கள் இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினோம் . ஆனால், குழு அளவிலான போட்டியில் ஜொகூருக்கு எதிராக 75 ஓட்டங்களை வெற்றிகரமாக தற்காத்து வெற்றி பெற்றபோதே எங்கள் அணியின் எழுச்சி தொடங்கியது. அந்தப் போட்டிக்குப் பிறகு அணியின் வேகம் தொடர்ந்து அதிகரித்தது.
எங்கள் வீரர்களின் தரம் மிகவும் உயர்வாக இருந்ததால், நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடி ஆட்டத்தை சிறப்பாக வழிநடத்தினோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் சிலாங்கூர் தொடர்ந்து இரு தங்கம் வென்று சாதனை படைத்தது.
"சுக்மா கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து இரு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் அணி இதுவாகும். என்னைப் பொறுத்தவரை, நான் பார்த்ததிலேயே இதுதான் மிகச்சிறந்த அணி, எனவே அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர் ஆடவர் கிரிக்கெட் அணி டி50 (T50) பிரிவின் இறுதிப் போட்டியில் ஜொகூர் அணியைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.











