சுக்மா 2026 ; காற்பந்து, கிரிக்கெட் போட்டிகள் முன்கூட்டியே நடைபெறும்

2 ஆகஸ்ட் 2026, 4:51 AM
சுக்மா 2026 ; காற்பந்து, கிரிக்கெட் போட்டிகள் முன்கூட்டியே நடைபெறும்
சுக்மா 2026 ; காற்பந்து, கிரிக்கெட் போட்டிகள் முன்கூட்டியே நடைபெறும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 2 : இம்மாதம் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி நடைபெறவுள்ள சுக்மா மலேசிய விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, காற்பந்து , கிரிக்கெட் போட்டிகள் முன்கூட்டியே தொடங்கப்படவுள்ளன.

அவ்விரு போட்டிகளும் நடைபெற சற்று நீண்ட காலம் தேவைப்படுவதால், அப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதியே தங்களது ஆட்டங்களைத் தொடங்கும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்ற நிர்வாக அதிகாரி முகமது நிஜாம் மர்ஜுகி தெரிவித்தார்.

ஆண்களுக்கான காற்பந்து போட்டிகள் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கம் (Stadium MBPJ), மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக அரங்கம் (Stadium UiTM) மற்றும் பண்டார் பாரு சாலாக் திங்கி அரங்கம் ஆகியவற்றில் நடைபெறும்.

"அதேவேளையில், பெண்களுக்கான காற்பந்து போட்டிகள் உலு சிலாங்கூர் நகராட்சி மன்ற அரங்கம் மற்றும் செலாயாங் நகராட்சி மன்ற அரங்கில் நடைபெறும்," என்று அவர் கூறினார்.

"இதற்கிடையில், ஆகஸ்ட் 11- ஆம் தேதி தொடங்கும் கிரிக்கெட் போட்டிகள், மலேசிய தேசிய பல்கலைக்கழக அரங்கம் மற்றும் கிள்ளானில் உள்ள பாயு எமாஸ் (Bayuemas) ஆகிய இடங்களில் நடைபெறும்.

ஒரு போட்டி முடிந்த பிறகு, அவர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும், மேலும் பிற மாநிலங்களுடன் சுழற்சி முறையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதால், இந்த ஆட்டங்களை முன்கூட்டியே நடத்த வேண்டியது அவசியமாகிறது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இந்த தேசிய அளவிலான பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டியை நடத்தும் அதிகாரப்பூர்வ மாநிலமாக சிலாங்கூர் மேற்கொண்டு வரும் ஆயத்தப் பணிகள் குறித்துக் கருத்துரைத்த முகமது நிஜாம், சுக்மா தீப்பந்த ஓட்டத்தின் இறுதிப் பகுதியை முன்னிட்டு அனைத்து தொண்டர்களும் வரும் ஆகஸ்ட் 9 அன்று செப்பாங்கில் (Sepang) ஒன்றிணைக்கப்படுவார்கள் என்று கூறினார்.

2026 சிலாங்கூர் சுக்மா போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும்.

இதில் 9 மாவட்டங்களில் உள்ள 52 போட்டித் தளங்களில் , 37 விளையாட்டு வகைகளில் இருந்து மொத்தம் 469 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து, செப்டம்பர் 5 முதல் 14 வரை பாரா சுக்மா 2026 போட்டிகள் நடைபெறும்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.