
கிள்ளான், ஆகஸ்ட் 18 - 2026 சுக்மா கிரிக்கெட் போட்டியில் ஜோகூர் அணியை வீழ்த்தி சிலாங்கூர் ஆடவர் கிரிக்கெட் அணி, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் வாயிலாக, ஈராண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஏமாற்றத்தை சிலாங்கூர் அணி ஈடு செய்தது.
கிள்ளானில் உள்ள பயூ எமாஸ் கிரிக்கெட் வளாகத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் சிலாங்கூர் அணி மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 211 ஓட்டங்களைக் குவித்தது.

மறுபுறம் ஜோகூர் அணி சிலாங்கூர் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 109 ஓட்டங்களுடன் பின் தங்கியது.
இதன் மூலம் சிலாங்கூர் அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஜோகூர் அணி வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியிருந்ததுடன், கிளாந்தான் அணி வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டது.

இந்த வரலாற்று வெற்றி குறித்துப் பேசிய சிலாங்கூர் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஷன் சென்னா சிங், தங்களது வீரர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த தகுதியான வெற்றி இது என்றும், குறிப்பாக இந்த டி50 தொடரில் சிலாங்கூர் அணி மற்ற அனைத்து அணிகளையும் விட மிகவும் ஆதிக்கம் செலுத்தி விளையாடியுள்ளது என்று தனது பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த 2024 சரவாக் சுக்மா போட்டியில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றிருந்த சிலாங்கூர் அணி, இம்முறை சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடிய சாதகமான சூழலைச் சரியாகப் பயன்படுத்தி இந்த தங்கப் பதக்கத்தைத் தட்டிப் பறித்தது.








