தைப்பிங், ஆகஸ்ட் 14 : நாட்டின் எந்தப் பகுதியிலாவது காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) 200 புள்ளிகளுக்கும் அதிகமாகப் பதிவானால், அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் மாநிலக் கல்வித் துறைகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகளை மூடலாம் .
பள்ளிகளில் புகைமூட்டம் மற்றும் காற்றுத் தூய்மைக்கேட்டு நிர்வகிப்புத் தொடர்பில், கல்வி அமைச்சு ஏற்கனவே 2016, 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட சுற்றறிக்கைகளைக் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிகள் தத்தம் முடிவுகளை எடுக்க முடியுமென கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ (Wong Kah Woh) தெரிவித்தார்.
கல்வித் துறை அதிகாரிகள் நாட்டின் புகைமூட்ட நிலைமையையும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டையும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
அதே வேளையில் அந்தந்தப் பகுதி நிலவரங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பொறுப்பு பள்ளி நிர்வாகங்களுக்கு உண்டு என்றும் அவர் விளக்கினார்.

இன்று தோயோ டயர் மலேசியா (Toyo Tyre Malaysia) மற்றும் பெர்லிஸ் மலேசியப் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Perlis) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் அவர் பேசினார்.
"ஒரு வேளை காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 100 புள்ளிகளைத் தாண்டினால், பள்ளிகள் தங்களின் வெளிப்புற நடவடிக்கைகளையும் கூட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளையும் ஒத்திவைக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.







