புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 - கடந்த சில தினங்களாக நீடித்த ஈரப்பதமான வானிலை, கிள்ளான் பள்ளத்தாக்கிலும் சரவாக்கிலும் புகை மூட்டத்தை தணியச் செய்திருந்தாலும், அது தற்காலிகமானதே.
மீண்டும் விரைவில் புகை மூட்டம் திரும்புமென மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹமட் ஹிஷாம் மொஹமட் அனீப் தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் வெப்பமான வறண்ட வானிலை மீண்டும் திரும்பி விடும். ஏனெனில் மலேசியா இன்னும் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் இருப்பதாகவும் அப்பருவம் செப்டம்பர் வரை நீடிக்குமெனவும் அவர் கூறினார்.
தென்மேற்கு பருவமழை காலத்தின் போது, குறைவான ஈரப்பதம், மழைப் பொழிவைக் குறைக்கும், அல்லது மழை இல்லாத நாட்கள் நீடிக்கலாமென மொஹமட் ஹிஷாம் குறிப்பிட்டார்.
மழை குறைந்து வறண்ட வெப்பமான வானிலை தொடரும்போது , காடுகள் அல்லது கரிநிலங்கள் தீப் பற்றி எரியும் ஆபத்துகள் அதிகரிக்கலாமென அவர் அச்சம் தெரிவித்தார்.
நாட்டில் எல் நினோ வெப்ப கால பருவம், கடுமையான எல் நினோ நிலையை எட்டும் சாத்தியம் 90 விழுக்காட்டை தாண்டியிருப்பதாக நேற்று மொஹமட் ஹிஷாம் கூறியிருந்தார். அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை ஏற்படும் இந்த எல் நினோ, நாட்டின் வானிலைப் பதிவிலே மிகவும் கடுமையானதாகப் பதிவு செய்யப்படுமெனவும் கணிக்கப்படுகிறது.







