ஷா ஆலாம், ஆகஸ்ட் 23 - சிலாங்கூரிலும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்திலும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக, ஐந்து உடனடி கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு மாநில அரசாங்கங்களும் இணக்கம் கண்டுள்ளன.
நீர் தேக்கம், வடிகால் அமைப்பு, நில நிர்வகிப்பு மற்றும் நிலையான நகர வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த இணக்கம் காணப்பட்டது.
இந்த இணக்கம், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பிரதமர் துறை ( கூட்டரசுப் பிரதேசம் ) அமைச்சர் ஹன்னா இயோ இருவருக்கும் இடையே எட்டப்பட்டது.
மலேசியர்களில் பத்து பேரில் மூவர் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் தான் வசிக்கிறார்கள் என்றும், இவ்விரு பகுதிகளும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு 41.7 விழுக்காடு பங்களிப்பை வழங்குவதால், இந்த நடவடிக்கை மிகவும் அவசரமானதாகக் கருதப்படுவதாக, அவ்விருவரும் தங்களது கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக, திட்டங்களின் இடங்கள், நோக்கம், செலவுகள், நிதி மற்றும் செயல்படுத்தும் முறைகளை முடிவு செய்ய இரு வாரங்களுக்குள் ஒரு தொழில்நுட்பக் கூட்டம் நடத்தப்படவுள்ளது; அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் 2027 வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இதற்கான ஆரம்ப ஆய்வுகளும் தயாரிக்கப்படும்.
மேலும்,பத்து மற்றும் கிள்ளான் கேட் நீர் அணைக்கட்டுகள் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகால நீர் நிர்வகிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பதை மதிப்பிட அவற்றின் கொள்ளளவு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அதோடு, தொழில்நுட்ப, நில, சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணங்களின் அடிப்படையில் ஆற்றின் மேல்நிலைப்பகுதிகளில் புதிய வெள்ளத் தடுப்புக் குளங்கள் அடையாளம் காணப்படவுள்ளன.
தற்போதைய உடனடி நடவடிக்கையாக கம்புங் லக்ஷமணா, சுங்கை கெர்தாஸ் மற்றும் புக்கிட் லாகோங் ஆகிய வெள்ளத் தடுப்புக் குளங்களின் கொள்ளளவு அதிகரிக்கப்படும்.
ஆறுகளைத் தூர்வாருதல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சிலாங்கூரில் தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணைக் கொட்டுவதற்காகப் பொருத்தமான 12 ஹெக்டேர் நிலமும் அடையாளம் காணப்படும்.
ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் இருப்பிடம், செயல்படுத்தும் நிறுவனம், மதிப்பிடப்பட்ட செலவு, நிதி ஆதாரம் மற்றும் செயல்படுத்தப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாக விவரிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் வெள்ள அபாயத்தைக் குறைத்து கோலாலம்பூர், சிலாங்கூர் மக்களின் கவலையைப் போக்குவதே இரு மாநில அரசாங்கங்களின் முக்கிய முன்னுரிமையாகும்.
வெள்ள நிர்வகிப்பு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பசுமை இடப் பாதுகாப்பு ஆகியவை சரிசமமாக திட்டமிடப்படுவதை உறுதி செய்ய இரு மாநில அரசாங்கங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவ்விரு தலைவர்களும் தெரிவித்தனர்.








