ஹனாய், அக் 30 — வியட்நாமின் மத்திய மாகாணங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், எட்டு பேர் காணாமல் போயுள்ள நிலையில் 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று வியட்நாம் பேரிடர் மற்றும் அணை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இச்சம்வத்தில் 1,28,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, 51 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் 120 வீடுகள் சேதமடைந்துள்ளன என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லமல், வெள்ளம் சுமார் 4,300 ஹெக்டேர் நெல் மற்றும் பிற பயிர்களை மூழ்கடித்துள்ளது. 650 ஹெக்டேர் பழமரங்கள் சேதமடைந்துள்ளன, 16,300க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் உயிரிழந்துள்ளன.
பல தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகள் நிலச்சரிவால் தடைப்பட்டுள்ளன. இதனால் பல மாகாணங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு, சேதத்தை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்கி வருகின்றனர்.




