பாலிங், அக் 24: நேற்று இரவு பாலிங் மாவட்டத்தின் சியோங் முகிமில் உள்ள கம்போங் பத்து 8 பகுதியில், ஏழு பேர் கொண்ட குடும்பம் ஒன்று மிகப் பெரிய அச்சத்துக்கு உள்ளானது. கடும் மழையால் ஆற்றில் நீர் திடீரென அதிகரித்து, பலமான நீரோட்டத்தால் அவர்களின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இச்சம்பவம் இரவு சுமார் 10 மணியளவில் நடந்தது. கடும் மழையின் காரணமாக ஆற்றின் நீர் கரையை மீறி பாய்ந்தது. நீரின் வேகத்தால் அந்த வீட்டின் பின்புறம் — அதாவது சமையலறை, படுக்கையறை மற்றும் குளியலறை பகுதிகள் முழுமையாக இடிந்து விழுந்தன. வீடு ஆற்றங்கரைக்கு மிக அருகில் இருந்ததால் சேதம் பெரிதாக ஏற்பட்டது.
இரவு 12.30 மணியளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் அந்த பகுதி இருட்டாக இருந்ததால் மீட்பு பணியாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர் எனவும் பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மட் தஞ்சில் தெரிவித்தார்.
வீட்டின் பின்புறம் முழுமையாக சேதமடைந்திருந்தாலும், யாரும் காயமடையவில்லை. “அந்த வீட்டில் இருந்த ஏழு பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எங்கள் குழு கட்டிடத்தின் நிலைமைப் பார்த்து, குடும்பத்தினருக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கியது,” என்று அவர் கூறினார்.
சமீபத்திய காலங்களில் வானிலை மாறிக்கொண்டே இருப்பதால், ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள வீடுகள் அதிக ஆபத்துக்கு உள்ளாகலாம். நீர்மட்டம் உயரும்போது, நிலம் பலவீனமடைந்து, வீடுகள் இடிந்து போகும் அபாயம் அதிகரிக்கிறது.
அதனால், மக்கள் அனைவரையும் எச்சரித்து, மழை பெய்யும் நேரங்களில் சுற்றுப்புற நிலையை கவனமாகக் கண்காணிக்குமாறும், அதிகாரிகளிடமிருந்து எச்சரிக்கை வந்தவுடன் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் தீயணைப்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.




