புத்ராஜெயா, ஆகஸ்ட் 22 : வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள், இனி கைமுறையாக (manual) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லவோ தேவையில்லை.
ஒட்டுமொத்த செயல்முறையும் தற்போது ' மையப்படுத்தப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் நிர்வகிப்பு முறை' (FWCMS) வாயிலாக இணையத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
அரசு அலுவலகங்களுக்குத் திரும்பத் திரும்பச் செல்வதைக் குறைப்பது, காத்திருப்பு நேரத்தைச் சுருக்குவது மற்றும் வேலைக்கு அமர்த்தும் முறையை மேலும் ஒழுங்குபடுத்தி வெளிப்படையானதாக மாற்றுவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த விண்ணப்பச் செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இருப்பினும், இந்த நடவடிக்கை வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதைக் குறிக்காது என்று அமைச்சு தெளிவுப்படுத்தியது.
"அனைத்து விண்ணப்பங்களும் தொடர்ந்து தீவிரப் பரிசீலனை, தொடர்புடைய சட்டங்கள், தகுதித் தேவைகள், வெளிநாட்டுத் தொழிலாளர் வேலை வாயப்புக் கொள்கைகள் மற்றும் தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகளின் ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும்" என்று அவ்வமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த விண்ணப்ப நடைமுறை, 1955-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் 60K பிரிவின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான முன் அனுமதியை முதலாளிகள் பெறுவதில் தொடங்கி, நிபந்தனை ஒப்புதல் கடிதத்தை (SKB) வழங்குவதோடு முடிவடைகிறது என்று அமைச்சு விளக்கியுள்ளது.
விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கினால், 14 நாட்களுக்குள் SKB-ஐப் பெற முடியும்.
முதலாளிகள் www.fwcms.com.my என்ற இணையதளம் வழியாக மையப்படுத்தப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் நிர்வகிப்பு முறையை( FWCMS ) அணுகலாம்.
இதற்கிடையில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தப்படி, உணவகத் துறையில் 15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலாளிகளின் விண்ணப்பங்களை எளிதாக்க ஒட்டுமொத்த ஒதுக்கீடும் கட்டம் கட்டமாக பிரித்தளிக்கும் அணுகுமுறை செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது.
"இந்த ஒதுக்கீட்டில், வழக்கு வாரியாக (case-by-case) நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட 1,033 முதலாளிகள் சார்ந்த 5,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
நேர்காணல்களை முடித்த அல்லது புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் முதலாளிகள், FWCMS வழியாக இந்தச் செயல்முறையை நிறைவு செய்யுமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.







