கோலா லங்காட்: தொழிற்சாலை கட்டுமானத் தளத்தில் கிரேன் கவிழ்ந்து 2 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலி; தடை உத்தரவு பிறப்பிப்பு!

3 ஆகஸ்ட் 2026, 3:35 AM
கோலா லங்காட்: தொழிற்சாலை கட்டுமானத் தளத்தில் கிரேன் கவிழ்ந்து 2 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலி; தடை உத்தரவு பிறப்பிப்பு!

ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கோலா லங்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சிலாங்கூர் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அத்தளத்திற்குத் தடை உத்தரவை வெளியிட்டுள்ளது.

அவ்விடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் முதற்கட்ட விசாரணையில் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் துறை இயக்குநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மொபைல் கிரேன் எனப்படும் நகரும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கான்கிரீட் பணிகளுக்கான ஆபத்து மதிப்பீட்டைச் செய்யத் தவறியது, கிரேன் இயக்கத்திற்கான முறையான திட்டத்தைத் தயாரிக்காதது மற்றும் தளப் பாதுகாப்பு மேற்பார்வையாளரை நியமிக்கத் தவறியது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தத் தடை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இத்துயரச் சம்பவத்தில், கவிழ்ந்த கிரேனின் இடிபாடுகளில் சிக்கி 40 மற்றும் 44 வயதுடைய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக, அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், விசாரனை அதிகாரிகளின் சிறப்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், கிரேனின் வளைவுப் பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இக்கட்டுமானத் தளம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதும் விசாரணையின்போது வெளிச்சத்திற்கு வந்தது. அதுமட்டுமின்றி, முதன்மை ஒப்பந்ததாரர் மற்றும் துணை ஒப்பந்ததாரர் ஆகிய இரு தரப்பினருமே கட்டுமானத் தளத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேலாண்மை தொடர்பான ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டு தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சட்டப் பிரிவு 15(1)-இன் கீழ் இவ்வழக்குத் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.