புத்ராஜெயா: 2026-ஆம் ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு புத்ராஜெயா சதுக்கத்தில் 80,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது 85% முதல் 90% வரை நிறைவடைந்துள்ளன.
"மலேசியா மடானி: அனைவரும் அனுபவிப்போம் நல்வாழ்வை " (Malaysia Madani: Kesejahteraan Dinikmati) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த கொண்டாட்டத்திற்காக , அனைத்து குழுக்களின் நிலையான பயிற்சி உட்பட பல்வேறு நிலைகளில் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் ஹம்சா தெரிவித்தார்.
"இந்த முறை அரசாங்கம் மிதமான ஒதுக்கீட்டுடன் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் அதன் உற்சாகத்தை நாம் முழுமையாக உணர முடியும்.
வானில் விமான சாகசம் சிறிய அளவில் இருக்கும். உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அணிவகுப்பு சொத்துகளும் குறைக்கப்பட்டுள்ளன." என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று நடைபெற்ற 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, புத்ராஜெயா கழகத்திடமிருந்து (PPj) தளத்தை ஒப்படைக்கும் நிகழ்விற்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.
வானிலை நிலவரங்களைக் கண்காணிப்பதும் ஒரு முக்கிய கவனத்திற்குரிய விஷயமாகும். இது குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற்று பொதுமக்களுக்கு வழங்குவதற்காக மலேசிய வானிலை ஆய்வுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் கூட்டு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக அவர் ஆற்றிய உரையில், கொண்டாட்ட ஏற்பாடுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தகவல் தொடர்பு அமைச்சு 18 செயற்குழுக்களை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதில் தளம் மற்றும் தளவாடத் தயார்நிலையைச் சிறந்த மட்டத்தில் உறுதி செய்வதில் 'தளவாடங்கள் மற்றும் விழா இட ஏற்பாட்டுக் குழு' முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
2026 தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகை ஆகஸ்ட் 26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும்.
இந்த அணிவகுப்பில் 77 குழுக்களைச் சேர்ந்த 10,819 பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள். மேலும் இதில் 328 இயந்திர சொத்துகள், 22 மின்சார வாகனங்கள் (EVs), 112 உயிருள்ள சொத்துகள் , 22 இசைக்குழுக்கள் மற்றும் 11 அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் இடம்பெறவுள்ளன.







