கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – 2026 தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ராபிட் கேஎல் (Rapid KL) நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இரயில், பேருந்து சேவைகள் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் 24 மணி நேரமும் செயல்படும்.
இந்த நீட்டிக்கப்பட்ட வேலை நேரம் எல்ஆர்டி (LRT), எம்ஆர்டி (MRT) மற்றும் கோலாலம்பூர் மோனோரயில் (Kuala Lumpur Monorail) உள்ளிட்ட அனைத்து இரயில் சேவைகளையும் உட்படுத்தியிருக்குமென அந்நிறுவனம் அறிவித்தது.
பல முக்கிய வழித்தடங்களில் இரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தேவை மற்றும் தற்போதைய நிலைய நிலவரங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
"சன்வே பிஆர்டி வழித்தடம் (Sunway BRT Line), சில பேருந்து வழித்தடங்கள் மற்றும் ராபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் (Rapid KL On-Demand) ஆகியவையும் 24 மணி நேரமும் இயங்கி, கொண்டாட்டக் காலம் முழுவதும் பொதுமக்களுக்கு கூடுதல் பயணச் சேவைகளை வழங்கும்.
குறிப்பாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு நடைபெறும் சுதந்திர தினத்துக்கு முந்திய கொண்டாட்டம் மற்றும் ஆகஸ்ட் 31ஆம் தேதி காலையில் புத்ராஜெயாவில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் எளிதாகப் பயணிப்பதை உறுதி செய்வதற்காக, இந்த வேலை நேர நீட்டிப்பு செயல்படுத்தப்படுவதாக ," ராபிட் கேஎல் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
புத்ராஜெயாவில் உள்ள கொண்டாட்ட இடத்திற்குச் செல்வதற்காக, இரு வழித்தடங்களில் இலவச போக்குவரத்துச் சேவைகளுக்காக, 103 பேருந்து சேவைகள் வழங்கப்படும்.
MS01 வழித்தடம்: புத்ராஜெயா சென்ட்ரல் நிலையத்திலிருந்து (Putrajaya Sentral Station) பிரசிண்ட் 2, ஜாலான் துன் அப்துல் ரசாக் வரை இயங்கும்.
இந்த வழித்தடம் ஆகஸ்ட் 30 மதியம் 2 மணி முதல் மறுநாள் மதியம் 2 மணி வரை செயல்படும்.
MS02 வழித்தடம்: புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்திலிருந்து (PICC) பிரசிண்ட் 3, ஜாலான் துன் உசேன் வரை இயங்கும். இது ஆகஸ்ட் 31 காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.
"இந்த இலவச பேருந்து சேவை, பொதுமக்கள் கொண்டாட்டப் பகுதியை எளிதாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில் தனிநபர் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைத் தணிக்கவும் இது உதவும்," என்று ராபிட் கேஎல் தெரிவித்தது.
பயணிகளின் சுமூகமான, பாதுகாப்பான நடமாட்டத்தை உறுதி செய்யவும் இரு நாட்களிலும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட முன்னணிப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.










