'ரஞ்சக்கான் மடாணி பெர்சாமா மலேசியாகு' மற்றும் தேசிய அரசாங்கச் சீர்திருத்த மாநாடு 2025- ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

8 டிசம்பர் 2025, 9:07 AM
'ரஞ்சக்கான் மடாணி பெர்சாமா மலேசியாகு' மற்றும் தேசிய அரசாங்கச் சீர்திருத்த மாநாடு 2025- ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோலாலம்பூர், டிச 8- புத்ராஜெயா சதுக்கத்தில் (Dataran Putrajaya) டிசம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்ற 'ரஞ்சக்கான் மடாணி பெர்சாமா மலேசியாகு' (Rancakkan MADANI Bersama Malaysiaku) நிகழ்ச்சி மற்றும் தேசிய அரசாங்கச் சேவைச் சீர்திருத்த மாநாடு 2025 (Konvensyen Nasional Reformasi Perkhidmatan Awam 2025) ஆகியவை, 502,804 பார்வையாளர்கள் வருகை தந்ததன் மூலம் அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரதமர் அலுவலகத்தின் (Pejabat Perdana Menteri) கீழ் இயங்கும் செயல்திறன் மேம்பாட்டுப் பிரிவு (PACU), பொதுச் சேவைத் துறை (JPA) மற்றும் மலேசிய உற்பத்தித்திறன் கழகம் (MPC) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு பல முக்கிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

அவற்றுள், விற்பனையாளர்கள், ரஹ்மா விற்பனை, விவசாயப் பொருட்கள், 'பெஸ்டா ராசா @ செலெரா மலேசியா' மற்றும் உணவு வண்டிகள் ஆகியவை அடங்கலாக மொத்த மடாணி விற்பனை RM2.15 மில்லியனை எட்டியது ஒரு முக்கியமான சாதனையாகும். அத்துடன், வர்த்தகப் பொருத்த (Business Matching) முயற்சியின் மதிப்பு RM400,000-க்கு மேல் பதிவாகியுள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டிய இடங்களில், அரச மலேசியக் காவல்துறை (PDRM) மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட அபராத சம்மன்களைச் செலுத்தும் கவுண்டர்கள் இருந்தன; இவை முறையே RM98,330 மற்றும் RM36,143 தொகையை வசூலித்துள்ளன, இதன் மூலம் மொத்த வசூல் RM134,473 ஆக உள்ளது.

அதுமட்டுமின்றி, நிகழ்ச்சிகள் முழுவதும் நடத்தப்பட்ட திறந்தவெளி நேர்காணல் அமர்வுகள் மூலம் 1,252 தனிநபர்கள் வேலைக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார்; இதில் இரண்டு துணைப் பிரதமர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் கூட்டரசு மற்றும் மாநில பொதுச் சேவையின் உயர்மட்டத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த 'ரஞ்சக்கான் மடாணி' நிகழ்ச்சியானது, 'மடாணி இளைஞர்கள்', 'மடாணி மக்கள் நலன்', 'அரசாங்கச் சேவைச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் (ARPA)',மடாணி ' மக்கள் தயாரிப்புகள்', 'மடாணி மக்கள் சகோதரத்துவம்', 'மடாணி விற்பனை', 'மலேசியா வருகை ஆண்டு 2026', மற்றும் 'ஆசியான் தலைமைத்துவமும் மடாணி இராஜதந்திரமும்' உள்ளிட்ட எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 500 செயல்பாடுகளைக் கொண்டிருந்தது.

மேலும், 'சஹாபாட் பெங்கேராக் மடாணி மக்கள் நலன் காப்புறுதித் திட்டம் (SIKR) 3.0, 'இல்திஸாம்' சுற்றறிக்கை, அரசாங்கச் சேவைச் செயல்திறன் குறியீடு (I-PPA), 'ARPA' பயிற்சி மாதிரி மற்றும் 'மலேசியா மெர்டேக்கா' புத்தகம் உள்ளிட்ட பல புதிய அரசாங்க முயற்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன. தனது முக்கிய உரையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மடாணி அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை மக்கள் நேரடியாக மதிப்பிடுவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாகச் செயல்படுகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் அரசாங்கச் சேவைகள் மற்றும் நன்மைகளை நேரடியாக மக்களுக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய அனைத்து அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் தரப்பினருக்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மக்களின் உறுதியான ஆதரவு, நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் மீதான நம்பிக்கையை மேலும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.