ஷா ஆலாம், ஆகஸ்ட் 19 - சிலாங்கூரில் தெருநாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் அடுத்த ஆண்டு விரிவான கருத்தடைத் திட்டங்களுக்காகத் தனி நிதியை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்படும்.
அந்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஊராட்சி மன்றங்கள் தொடர்பான கூட்டத்தில் விவாதிக்கப்படுமென ஊராட்சித் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் தெரிவித்தார்.
சிலாங்கூரில் தெருநாய் பிரச்சினையைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மீடியா சிலாங்கூர் (Media Selangor) கேட்டறிந்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

ஊராட்சி அமைப்புகள், நகர்மன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் (NGOs) மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த பிராணிகள் கருத்தடைத் திட்டங்கள் அடிக்கடி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கைவிடப்பட்ட விலங்குகள், குறிப்பாகத் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினை, பொது பாதுகாப்பு மற்றும் விலங்கு நலன் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டிருப்பதால் , அவ்விவகாரத்தை மிகவும் முறையாக அணுக வேண்டியிருப்பதாக இங் கூறினார்.

தனியார் கால்நடை சேவைகள் மூலம் ஒரு நாய்க்கு கருத்தடை செய்வதற்கான செலவு சுமார் RM150 வரை இருக்கும்.
ஆனால் கால்நடை மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் குழுக்களாக இந்த நடைமுறையைச் செய்வதன் மூலம் ஒரு நாய்க்கான செலவை சுமார் RM100 ஆகக் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், இவ்விவகாரத்தில் பொதுமக்கள் நடைமுறையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல் தெருநாய்கள் மற்றும் இதர விலங்குகளுக்கு எதிராகத் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டாமென இங் அறிவுறுத்தினார்.
அதற்குப் பதிலாக, தெருவிலங்குகளால் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால், அது குறித்து அந்தந்த ஊராட்சி அமைப்பில் அல்லது பொது புகார் நிர்வகிப்பு அமைப்பில் (SISPAA) புகார் அளிக்க வேண்டும்.
இதன் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்; அதோடு சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்கள் அல்லது சர்ச்சைகளைத் தவிர்க்க முடியுமெனவும் இங் குறிப்பிட்டார்.









