காஜாங், செப். 12 - கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி செராஸ், தாமான் மெகாவில் தெரு நாய் கடித்ததில் சிறுவன் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக அச்சிறுவன் புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான 10 வினாடி வீடியோ வைரலானதை தொடர்ந்து தாமான் மெகாவில் வசிப்பவர்கள் கருத்தை மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டனர்.

செராஸ், தாமான் மெகா குடியிருப்புப் பகுதியில் 6 வயது சிறுவனை தெரு நாய் கடித்த சம்பவம், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக 65 வயதான அர்ஜுனா பிந்தி மிஸ்ரா தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் நாய்கள் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த போதிலும், இவ்வாறான மோசமான சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என குறிப்பிட்டார்.
இப்போது தனது பேரன்களை பூங்காவில் விளையாட அனுமதிக்கக் கூட பயமாக உள்ளதாக கூறினார். “என் கண்காணிப்பின் படி, தாக்கிய தெரு நாய் ஒருவரின் வளர்ப்பு பிராணியாக இருந்திருக்கலாம். ஆனால், அது கைவிடப்பட்டு இப்போது தெரு நாயாக மாறிவிட்டது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இரவில் இன்னும் சில நாய்கள் குழுவாகச் சுற்றித் திரிவதைப் பார்க்கிறோம். இது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே இச்சம்பவத்தை நேரில் கண்ட 57 வயதான ஸரீஃபா பிந்தி அப்துல்லா, சம்பவத்திற்குப் பின்னர் அங்கு வாழும் மக்களிடையே அச்சம் அதிகரித்திருப்பதாகக் கூறினார்.
“முன்பும் சில தெரு நாய்கள் குடியிருப்பாளர்களை துரத்திய சம்பவங்கள் நடந்துள்ளன. சில மாதங்களுக்கு முன், ஒரு சீன முதியவர் மற்றும் அவரது மகள் கடிக்கப்பட்டார்கள். ஆனால் அப்போது எந்தப் புகாரும் செய்யப்படவில்லை. இப்போது நடந்த சம்பவம் மிகக் மோசமாக இருப்பதால், அனைவரும் பாதுகாப்பு குறித்து அஞ்சுகின்றனர்,” என்று அவர் விளக்கினார்.

ஒரு தந்தையாக, தனது குழந்தைகள் சைக்கிளில் பள்ளிக்கு செல்வதும், விளையாடுவதும் மிகவும் ஆபத்தாக இருப்பதாக தான் உணர்வதாக 38 வயதான அமிருல் ருஸ்டி பின் அபு பாக்கர் கூறினார்.
நாயின் சத்தம் கேட்டாலே குழந்தைகள் பயந்து வீட்டிற்குள் ஓடுகிறார்கள்,” என்று அவர் கூறினார். அவரும் மற்றும் சிலர் இணைந்து சிறுவனை கடித்த தெரு நாயை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், இதுவரை ஐந்து தெரு நாய்கள் காஜாங் நகராண்மை கழக உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், 62 வயதான கிரிஸ்வேனி சுப்ரமணியம், கூறுகையில், “அச்சிறுவன் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் தாக்கியது. சைக்கிளின் சத்தம் அந்த தெரு நாயை பயமுறுத்தியிருக்கலாம் அல்லது சிறுவன் தவறுதலாக நாயை தொந்தரவு செய்திருக்கலாம். ஆனால், இவ்வளவு கொடூரமாகத் கடித்ததை நான் முதன்முறையாகக் காண்கிறேன். அந்த நாய் கண்டிப்பாகப் பிடிக்கப்பட வேண்டும், இல்லையெனில், இன்னும் மோசமான விபத்து நடக்கக்கூடும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவத்தை நேரில் காணவில்லை என்றாலும், 46 வயதான வாணி அறுமுகம், புலன குழுமத்தின் மூலம் இதை அறிந்ததாகக் கூறினார். அவர், “கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்புரத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறினார். ஆனால், இரவு நேரத்தில் நாய்கள் மீண்டும் கடைகள் அருகிலும், குறிப்பாக சீன உணவகங்கள் மற்றும் 99 ஸ்பீட்மார்ட் அருகிலும் கூடும் பழக்கம் உண்டு.
வளர்த்த நாய்கள் கைவிடப்பட்டதால், அவை தெரு நாய்களாக மாறியுள்ளன. இது காஜாங் நகராண்மை கழக அதிகாரிகள் தீவிரமாகக் கையாள வேண்டிய விஷயம், ” என்று கவலை தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, காஜாங் நகராண்மை கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மொத்தம் ஐந்து நாய்கள் பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இன்னும் சுதந்திரமாகச் சுற்றும் நாய்களைப் பிடிக்க, வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்களின் கோரிக்கை, தெரு நாய் பிரச்சனையை தற்காலிகமாக அல்லாமல், நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.