ஷா ஆலம், செப் 12 - சிலாங்கூரில் சமீபக் காலமாக பல இடங்களில் தெரு நாய்கள் குறித்த பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன். கடந்த வாரம் செராஸில் சிறுவன் ஒருவனை தெரு நாய் தாக்கிய காணொளி சமுக வலைத்தளத்தில் வைரலானது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, சில ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநகராட்சிகள் அதன் பகுதியில் இருக்கும் தெரு நாய்கள் குறித்த பிரச்சனைகளை பற்றி மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டன.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் 2023ஆம் ஆண்டு 2,500 தெரு நாய்கள் இருந்ததாகக் கணகெடுப்பு காட்டுகிறது. ஆனால், அதன் பிறகு தெரு நாய்கள் குறித்த கணகெடுப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அங்கு 2024ஆம் ஆண்டு தெரு நாய்கள் மக்களை தாக்கிய 81 சம்பவங்கள் பதிவான நிலையில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அந்த எண்ணிக்கை 50ஆக பாதிவாகியுள்ளது.
அதில் மக்களின் வளர்ப்பு நாய்களாலும் சில சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது வளர்ப்பு நாய்களால் 2024ஆம் ஆண்டு 41 சம்பவங்களும் 2025ஆம் ஆண்டு 35 சம்பங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வளர்ப்பு நாய்கள் தொடர்பான சம்பங்களில் பெரும்பாலனவை அக்குடும்ப உறுப்பினர்களை தாக்கிய சம்பவங்களாகவே உள்ளன. அதில் இரண்டு சம்பவங்கள் மட்டுமே பொதுமக்களை தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்த போன்ற சம்பங்களை குறைக்க பிபிடிகள் SOP பின்பற்றி பல நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. அதில் கயிறு, வலை போன்றவற்றை பயன்படுத்தி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தெரு நாய்களை பிடித்து வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகளின் பயன் சிறப்பாக இல்லை, காரணம் இதன் மூலம் குறைவான நாய்களே மட்டும் பிடிக்க முடிகிறது என்றது.
அதுமட்டுமில்லாம்ல், தெருநாய் பிரச்சனைக்கு வருடத்திற்கு சுமார் RM100,000.00 செலவிடப்படுகிறது. இது நாய்களை தங்க வைக்கும் செலவுகளுக்கான தொகை மட்டுமே; மேலாண்மை செலவுகள் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தது.
கூடுதலாக, காஜாங் ஊராட்சி மன்றம் கூட்டுகளை பயன்படுத்தி தெரு நாய்களை பிடிக்கும் முறையை பயனபடுத்த தொடங்கியுள்ளது. இதனை அடுத்து, கிள்ளான் மாநகர் மன்றம் நாய்களை பராமரிக்க ஒரு பெரிய இடத்தை கட்ட எண்ணம் கொண்டுள்ளது. இந்த இடத்தை அந்நாய்களை தங்க வைப்பதற்கும் அவற்றிற்கு கருத்தடை செய்வதற்கும் பயன்படுத்த முடியும் என தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல், அரசு சாரா நிறுவனங்களின் கருத்து அடிப்படையில் கருத்தடை நடவடிக்கையும், நாய்கள் மக்களை தாக்கும் பிரச்சனைக்கு பெரிதளவில் பயனளிக்காது என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி விளக்கியது, காரணம் நாய்களை பராமரிக்கும் இடப் பற்றாக்குறையால் கருத்தடைக்கு பிறகு அவற்றை மறுபடியும் தெருவில் விட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதின் வரிசையில் சுபாங் ஜெயா மாநகராட்சி அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து தெரு நாய்களை தத்தெடுக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், காஜாங், செலாயாங் ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிகள் ஆகியவை அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோலாலம்பூர் மாநகர் மன்றம் இந்த கருத்தடை நடவடிக்கையை ஏற்கனவே செயல்படுத்த தொடங்கி விட்டதாக தகவல் வழங்கப்பட்டது. நாய்களை பிடிக்கும் சமயத்தில் மயக்க மருந்தை பயன்படுத்தும் செயலும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தெரு நாய்களின் பிரச்சனையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.


