மணிலா, ஆகஸ்ட் 18 — இன்று பிலிப்பைன்ஸில் உள்ள சாம்போவாங்கா நகரில், உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய 9ஆம் வகுப்பு மாணவர், துப்பாக்கி மற்றும் ரைஃபிளை பள்ளி வளாகத்துக்குள் கொண்டு வந்து வகுப்பறையில் இருந்த மாணவர்களை நோக்கிச் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தடயவியல் விசாரணைக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
பிலிப்பைன்ஸில் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரிதானவை. அந்நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், சட்டவிரோத துப்பாக்கிகள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.







