ஷா ஆலாம், ஆகஸ்ட் 18 - மலேசியாவில் இவ்வாண்டு டுரியான் பழ உற்பத்தி அதிகரித்த நிலையில், “பழங்களின் ராஜா” என்றழைக்கப்படும் அப்பழத்தை மக்கள் அதிக அளவில் வாங்கி ருசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக உற்பத்தி காரணமாக டுரியான்களின் விலையும் பல இடங்களில் குறைந்ததால், வழக்கத்தைவிட அதிக அளவில் டுரியானை வாங்கும் போக்கும் அதிகரித்தது. எனினும், டுரியான் பருவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தாலும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர் தனேஸ்வரி ராஜசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.

டுரியான் பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ் இதில் காணப்படுகிறது. எனவே, சுமார் 100 கிராம் டுரியான் உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகளைப் பெற முடியும் என தனேஸ்வரி கூறினார்.
மலேசிய உணவுக் கலவைத் தரவுகளின்படி, 100 கிராம் டுரியான் (3 அல்லது 4 சுளைகள்) பழத்தில் சுமார் 23.3 மில்லிகிராம் வைட்டமின் சி மற்றும் 44 மில்லிகிராம் பாஸ்பரஸ் காணப்படுகிறது. அதே அளவு டுரியானில் சுமார் 27.9 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. ஆனால், டுரியான் பருவத்தின்போது சில மலேசியர்கள் ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து முழு டுரியான்களைக்கூட உட்கொள்வதாக தனேஸ்வரி தெரிவித்தார்.

டுரியான் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையைக் கொண்டிருப்பதால், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அதை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நீரிழிவு நோயாளிகள் டுரியானை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் அவர்கள் உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
மேலும், டுரியான் அதிகம் சூட்டுத் தன்மை கொண்ட பழமாகும். “சிலருடைய உடல் சூடான உணவுகளுக்கு உணர்திறன் கொண்டதாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் டுரியானை அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் அசௌகரியம் ஏற்படலாம். ஆகவே அளவோடு சாப்பிடுவது நல்லது,” என்றாரவர்.
மேலும், டுரியானுடன் சேர்த்து உட்கொள்ளப்படும் உணவு மற்றும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“டுரியானுடன் ஒரே நேரத்தில் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பானங்கள், பால் அல்லது சிவப்பு இறைச்சி போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் அசௌகரியம், வயிற்று உப்புசம் அல்லது செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம்,” என்றார்.
இதய நோய் அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் போன்ற ஏற்கெனவே உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் டுரியான் உட்கொள்ளும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சந்தையில் கிடைக்கும் அனைத்து வகையான டுரியான்களையும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கக்கூடாது என்றும் தனேஸ்வரி கூறினார். மலேசியாவில் சுமார் 200 வகையான டுரியான்கள் பயிரிடப்படுவதாகக் கூறப்படும் நிலையில், முசாங் கிங் மற்றும் பிளாக் தோர்ன் போன்றவை மிகவும் பிரபலமான வகைகளில் அடங்குகின்றன.
அதனால் நமக்குப் பிடித்த வகையை மட்டும் தேர்வு செய்தால் போதும். எல்லா வகையையும் வாங்க வேண்டாமென அவர் அறிவுறுத்தினார். பின்னர், குடும்பத்தில் எத்தனை பேர் டுரியான் சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்து தேவையான அளவு மட்டுமே வாங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

டுரியான் பருவம் என்பது மலேசியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் காலமாக இருந்தாலும், அதிக உற்பத்தி காரணமாக அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே தனேஸ்வரியின் அறிவுரையாக உள்ளது.
“டுரியான் சுவையாக இருக்கும், அதனால் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் எப்போது நிறுத்த வேண்டும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சாப்பிடலாம், ஆனால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்,” என்றார் ஊட்டச்சத்து நிபுணர் தனேஸ்வரி.








