தெமர்லோ, ஆகஸ்ட் 17 - செப்பாங் அனைத்துலக பந்தய தளத்தில் (SIC) அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள 'ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்' (Formula 1 Gulf Air Bahrain Grand Prix) போட்டிக்கான 200 ரிங்கிட் 'மடானி' டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் முகமட் தவ்ஃபிக் ஜோஹாரி தெரிவித்தார்.
விற்பனைத் தொடங்கப்பட்டதில் இருந்தே மலேசியர்களிடையே இந்த டிக்கெட்டுகளுக்கு பெரும் வரவேற்பு இருந்ததாக செப்பாங் அனைத்துலக பந்தயத் தள நிர்வாகம் (SIC) தெரிவித்ததாக அவர் கூறினார்.
“இன்றைய நிலவரப்படி மடானி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. எனினும், தேவை ஏற்பட்டால் கூடுதல் டிக்கெட்டுகளை வழங்க முடியுமா என்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். இதுகுறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும்,” என அவர் கூறினார்.
இங்குள்ளள துன் ரசாக் மண்டபத்தில் நடைபெற்ற, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சின் (KBS) திறன் பயிற்சி நிறுவனங்களின் (ILKBS) 'கல்வி நடவடிக்கைகள் மூலமான கண்டுபிடிப்பு மேம்பாடு' (iDEA’26) எனும் நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், 'iDEA’26' என்பது வெறும் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி மட்டுமல்ல என்றும், TVET மாணவர்கள் தங்களின் கருத்துக்கள், படைப்பாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்கும், அவற்றை உள்ளூர், ஆசியான் மற்றும் அனைத்துலக சந்தைகளில் வணிக ரீதியிலான கண்டுபிடிப்புகளாக மாற்றுவதற்குமான ஒரு தளமாகும் என்றும் தவ்ஃபிக் கூறினார் .
"அவர்களின் தயாரிப்புகள் போட்டிகளில் வெற்றி பெறுவதோடு நின்றுவிடாமல், சந்தைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவை நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்படுவதற்கு முன்பு, எவ்வாறு மேலும் மேம்படுத்தப்படலாம் என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம்," என்று அவர் கூறினார் .





