2026, 2027ஆம் ஆண்டுகள் வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகக்கூடும் - நிபுணர்கள் எச்சரிக்கை

16 ஜூன் 2026, 7:53 AM
2026, 2027ஆம் ஆண்டுகள் வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகக்கூடும் -  நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 16 – உலகளாவிய வெப்பநிலை 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தைத் தொட்டு, வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் காலநிலை மாற்ற நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் (UKM) காலநிலை மாற்றக் நிபுணர் டாக்டர் பிரெடோலின் தாங்காங் (Dr Fredolin Tangang) இது குறித்து விவரித்துப் பேசியுள்ளார்.

வரலாற்றில் கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகள் மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியுள்ள நிலையில், தற்போது உருவாகி வரும் 2026/27 எல் நினோ (El Nino) காலநிலை நிகழ்வானது, முந்தைய எல் நினோக்களை விட மிகவும் வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதே இந்த அதீத வெப்பநிலைக்கு முதன்மைக் காரணம் என்று அவர் கூறினார்.

"தென்கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவில், எல் நினோ நிகழ்வானது நீண்ட கால வறட்சி, வழக்கத்தை விட அதிகமான வெப்பம், கடுமையான வெப்ப அலைகளின் (Heatwave) அபாயம், காட்டுத் தீ மற்றும் கடுமையான புகைமூட்டங்களை ஏற்படுத்தும்," என்று அவர் குறிப்பிட்டார்.

எல் நினோ விரைவில் நாட்டின் வானிலையைப் பாதிக்கத் தொடங்கும் என்றும், அது அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிக்கக் கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அண்மைக்கால எச்சரிக்கை குறித்து அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

எனவே, இந்த 2026/27 எல் நினோ நிகழ்வை வெறும் ஒரு சாதாரண வானிலை மாற்றமாகப் பார்க்காமல், தயார்நிலையை வலுப்படுத்துவதற்கான ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.