ஷா ஆலாம், ஆகஸ்ட் 16 — பந்திங் சட்டமன்றத் தொகுதியில் ஓய்வூதியம் பெறாத 36 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு, தலா RM200 மதிப்பிலான ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வீரர்கள் தினத்தை முன்னிட்டு இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகப் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.
நாட்டின் அமைதி மற்றும் நலனைப் பாதுகாப்பதில் முன்னாள் இராணுவ வீரர்கள் ஆற்றிய சேவை, பங்களிப்பு மற்றும் தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில அரசாங்கம் இந்த உதவியை வழங்கியுள்ளதாகத் அவர் தெரிவித்தார்.
வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளை ஆகஸ்ட் 1 முதல் 31ஆம் தேதி வரை பந்திங் Econsave பேரங்காடியில் அன்றாடத் தேவைக்கான பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தலாம்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், இந்த உதவி பயனாளிகளின் அன்றாடச் செலவுச் சுமையை ஓரளவாவது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







