மலாக்கா, ஆகஸ்ட் 16 — 1971ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டமான AUKU முழுமையாக நீக்கப்படும்.
அதற்குப் பதிலாக மாணவர் இயக்கங்களை கட்டுப்படுத்தும் அல்லது நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான புதிய சட்டம் எதுவும் கொண்டுவரப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
மாணவர்கள் ஏதேனும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவற்றைக் கையாள்வதற்கு நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானவை என்றும் பிரதமர் கூறினார்.
மாணவர்களும் நாட்டின் சாதாரண குடிமக்களே என்பதால், அவர்கள் ஏதேனும் குற்றங்களைச் செய்தால் அனைவருக்கும் பொருந்தும் பொதுச் சட்டங்களுக்கு உட்பட வேண்டும் என அவர் விளக்கினார்.
1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட AUKU, இதுவரை ஏழு முறை திருத்தப்பட்டுள்ளது.
அவற்றில் 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முக்கிய திருத்தத்தின் மூலம், மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே, 2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அண்மைய திருத்தங்களின் கீழ், பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் துணைவேந்தரிடமிருந்து மாற்றப்பட்டது.
AUKU சட்டத்தின் 16B பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம், மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் மாணவர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றன.
மேலும், AUKU சட்டத்தின் 15A பிரிவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் மூலம், மாணவர் பிரதிநிதி மன்றம் மற்றும் மாணவர் அமைப்புகள் நிதி திரட்டவும், பல்வேறு வழிகளில் நன்கொடைகளைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அதிக ஜனநாயக சுதந்திரத்தை வழங்கும் வகையில் AUKU-வை முழுமையாக நீக்கும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களில் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.







