கோலாலம்பூர், ஜூலை 20 — இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இணைய மோசடிக் குற்றங்கள் தொடர்பில் 8,014 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இது 2025-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 6,140 குற்றச்சாட்டுகளைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையவழி மோசடி அச்சுறுத்தல் என்பது வழக்குகளின் எண்ணிக்கையில் மட்டுமல்லாது, பொதுமக்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளின் அளவிலும் மேலும் தீவிரமடைந்து வருவதை இது காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
"எனவே, மேலும் சிக்கலானதாகவும் அதிநவீனமாகவும் உருவெடுத்து வரும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளும் வகையில், இணையவழிக் குற்றங்களை மேலும் திறம்பட எதிர்கொள்ள ஒரு முழுமையான சைபர் குற்றவியல் சட்டத்தை இயற்ற வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது," என்று அவர் டேவான் நெகாராவில் கூறினார்.
மே மாதம் வரை 10,245 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொலைத் தொடர்பு, மின்னணு வர்த்தகம், போலி முதலீடுகள் மற்றும் போலி கடன்கள் தொடர்பான குற்றங்களிலேயே அதிகமான கைதுகள் நடந்துள்ளதுள்ளன.
2022-இல் 16,244-ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை, 2025-இல் 23,753-ஆக அதிகரித்தது. இது இணையவழி மோசடிகளை ஒழிப்பதில் அரச மலேசிய காவல் படை தொடர்ந்து மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்கு சான்றாகும்.
எட்டு பகுதிகள் மற்றும் 61 பிரிவுகளைக் கொண்ட '2026 இணையக் குற்றங்கள் மசோதா' கடந்த ஜூலை 1 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.







