தொலைபேசி மோசடியில் சிக்கி RM1.2 மில்லியன் இழந்த முதலீட்டு நிறுவன நிர்வாகி

22 செப்டெம்பர் 2026, 6:14 AM
தொலைபேசி மோசடியில் சிக்கி RM1.2 மில்லியன் இழந்த முதலீட்டு நிறுவன நிர்வாகி

கோத்தா பாரு, செப். 22 — கிளந்தானில் முதலீட்டு நிறுவனமொன்றின் பெண் நிர்வாகி (50), மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு சுமார் 1.2 மில்லியன் ரிங்கிட் இழந்துள்ளதாக போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை, போலீஸ் அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட நபர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர் தொலைபேசி அழைப்பைப் பெற்றுள்ளார். அவர் பணமோசடி வழக்கில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் கூறினார்.

சந்தேக நபர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய அப்பெண், அச்சத்தின் காரணமாக தனது வங்கிக் கணக்குகளில் இருந்த பணத்தை எடுத்துள்ளார். இதில் ஊழியர் சேமநிதி பணமும் அடங்கும்.

அதுமட்டுமின்றி, நகைகளை அடகு வைத்து, மேலும் சில நகைகளை விற்று கிட்டத்தட்ட 500,000 ரிங்கிட்டை அவர் திரட்டியுள்ளார்.

மோசடி கும்பலிடம் தனது பணம் முழுவதையும் ஒப்படைத்த பின்னர், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகே அவர் போலீசில் புகார் செய்ததாக முகமட் யூசோப் தெரிவித்தார்.

தாம் பணமோசடி வழக்கில் சம்பந்தப்படவில்லை என்பது அப்பெண்ணுக்குத் தெரிந்திருந்த போதிலும், அச்சத்தின் காரணமாக இந்த விவகாரம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடமோ போலீசாரிடமோ தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட மோசடி கும்பல் தொலைபேசி எண்ணை போலியாகக் காண்பிக்கும் செயலியைப் பயன்படுத்தியிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அச்செயலியின் மூலம் கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் தொலைபேசி எண்ணையே பயன்படுத்தி நாளொன்றுக்கு 68 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போலீஸ் அல்லது மலேசிய தேசிய வங்கி போன்ற எந்தவொரு அரசாங்க நிறுவனமும் பொதுமக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவோ அல்லது புதிய வங்கிக் கணக்கைத் திறக்குமாறோ ஒருபோதும் உத்தரவிடாது.

இதுபோன்ற சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகள் வந்தால், உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் மூலம் அழைத்து தகவல்களைச் சரிபார்க்குமாறும் முகமட் யூசோப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

கிளந்தானில் பதிவான மிகப்பெரிய தனிநபர் மோசடி இழப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கிளந்தான் போலீசார் தேடி வருகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.