'போஸ் ஸ்கேம்' (Boss Scam) இணைய மோசடி: ஊழியர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து கடும் எச்சரிக்கை

18 ஜூலை 2026, 5:09 AM
'போஸ் ஸ்கேம்' (Boss Scam) இணைய மோசடி: ஊழியர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து கடும் எச்சரிக்கை

மும்பை, ஜூலை 18: நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் (CEO) மற்றும் பிற உயர் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, ஊழியர்களை ஏமாற்றிப் பணப் பரிமாற்றம் செய்யத் தூண்டும் சைபர் மோசடிகள் குறித்து இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய மோசடிகளை 'போஸ் ஸ்கேம்' (Boss Scam) என செபி குறிப்பிட்டடுள்ளது. இந்தியச் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திடமிருந்து (I4C) இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் நிதித்துறை அதிகாரிகள் மற்றும் நிறுவன ஊழியர்களை இலக்காகக் கொண்டு மின்னஞ்சல், வாட்ஸ்அப் (WhatsApp), மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) மற்றும் பிற சமூக ஊடகத் தளங்கள் வழியாகத் தொடர்பு கொள்கின்றனர்.

தங்களை அந்தந்த நிறுவனங்களின் சிஇஓக்கள் அல்லது உயர் அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை உடனடியாகப் பரிமாற்றம் செய்யுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடுகிறார்கள்.

இந்த மோசடியின் மற்றொரு வடிவமாக, ஊழியர்களுக்கு நச்சுநிரல் (Malware) கோப்புகள் அனுப்பப்படுகின்றன. ஊழியர்கள் அந்தக் கோப்புகளைத் திறந்தவுடன், அந்த நச்சுநிரலானது அவர்களின் 'வாட்ஸ்அப் வெப்' (WhatsApp Web) பக்கங்களை ஆக்கிரமிப்பதுடன், அவர்களின் மின்னணுச் சாதனங்களின் கட்டுப்பாட்டையும் முடக்கிவிடுகிறது.

இதன் மூலம் நிதி அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்கிற்குள் நுழையும் மோசடிக்காரர்கள், கணக்குத் துறை ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, தாங்கள் குறிப்பிடும் போலி வங்கிக் கணக்குகளுக்கு (Mule Bank Accounts) அவசரமாகப் பணம் செலுத்துமாறு கட்டளையிடுகின்றனர்.

இந்த அபாயகரமான சூழலைக் கருத்தில் கொண்டு, தங்களின் கீழ் இயங்கும் அனைத்து நிதி மற்றும் வணிக நிறுவனங்களும் தங்களது அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு செபி கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, சமூக ஊடகத் தளங்கள் அல்லது குறுஞ்செய்திகள் வழியாக வரும் உத்தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, எவ்வித சரிபார்ப்பும் இன்றி அவசரப்பட்டுப் பணப் பரிமாற்றங்களைச் செய்ய வேண்டாம் என செபி அனைத்து ஊழியர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.